மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகையாக 40 சதவீதம் ஊனமுற்றவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாயும், 75 சதவீதம் ஊனமுற்றவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாற்றுத் திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மேலும், இதே போன்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் ஆகிய இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சிறு மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் விலைவாசி உயர்வினால் மிகுந்த சிரமத்தை மாற்றுத்திறனாளிகள் அனுபவித்து வருகிறோம். பலருக்கு பல நன்மையை செய்து கொண்டிருக்கும் அரசாங்கம் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. பல மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை 5,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் நிலையில் தமிழ்நாட்டில் மிகவும் குறைந்த தொகை மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தக்காளி முதல் அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை வரை உயர்ந்துள்ளதால் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்தில் உள்ளோம். திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தங்களுக்கு உதவ வேண்டும் என வெங்கடாசலம் கேட்டுக் கொண்டார்.



சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாற்றுத் திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.