கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர்,  ராயக்கோட்டை, காவேரிப்பட்டணம், சூளகிரி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடியாகும் தக்காளி  ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட் மற்றும் ராயக்கோட்டை தக்காளி மார்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கமிஷன் மண்டிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பூக்கள் மற்றும் பிஞ்சுகள் மழையால் உதிர்ந்து செடிகளில் உள்ள இலைகளும் அழுகி உள்ளது.  மேலும் சில பகுதிகளில் தக்காளி செட்டிகள் முற்றிலும் அழுகி காய்துள்ளது. இதனால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் வரை செலவு செய்து ஒரு ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்த  பெரும்பாலான விவசாயிகளுக்கு  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 



 


ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மண்டிகளில் இருந்து மட்டும் நாள் ஒன்றுக்கு 800 டன் வரை ஏற்றுமதி செய்யப்பட கூடிய நிலையில் இருந்து வந்தது.  தற்போது தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளதால் வரத்து குறைந்து சுமார் 50 டன் அளவிற்கு மட்டுமே தக்காளி வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடுக்கு தக்காளி ஏற்றுமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் 100 க்கு  விற்பனை செய்யப்படுகிறது. 


 




இதுகுறித்து தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில்,  நாங்கள் எங்களுடைய விவசாய நிலத்தில் ஒரு முறை தக்காளி சாகுபடி செய்தால் குறைந்தது 10 முறை அறுவடை செய்ய முடியும், ஆனால் தற்போது தொடர் மழையால் இரண்டு முறை அறுவடை செய்த நிலையில் தக்காளி செடிகள் அழுகியும் மற்றும் காய்ந்துள்ளது. மேலும் தக்காளி செடிகளின் இருந்து உதிர்ந்து அழுகியுள்ளது.  தக்காளியின் விலை ரகத்திற்கு ஏற்றார்போல் 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இருந்த போதிலும் தக்காளி விலை  உயர்ந்தாலும் தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளி சாகுபடி விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.  மேலும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பட்டுள்ளது, எனவே  தக்காளியை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.