தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இணைந்து சேலத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் பிரபு தலைமை வகித்தார். 200க்கும் மேற்பட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இணைந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர். 



இதில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும், 2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்கிட வேண்டும், அரசின் திட்டப்பணிகளில் அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதைத் தவிர்த்து திட்டப் பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.



உண்ணாவிரத போராட்டம் குறித்து தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அர்த்தநாரி கூறுகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தங்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் காலி பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தால் அரசு அறிவிக்கும் புதிய திட்டங்கள் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் கூடுதல் பணி சுமை காரணமாக வருவாய் துறை அலுவலர்கள் மன உளைச்சலில் உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இம்மாதம் 22 ஆம் தேதி காத்திருப்பு போராட்டமும், 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.