சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த மகாதேவ் என்பவர் பொறியியல் பட்டதாரி ஆக உள்ளார். இந்த நிலையில் அரசு வேலை வாங்கித் தருவதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனின் முன்னாள் உதவியாளர் பழனிச்சாமி என்பவர் 22 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றி விட்டதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். குறிப்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டபோது, அவருக்கு மாற்று வேட்பாளராக தன்னை நிறுத்தினார் என்றார். எனவே சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனின் உதவியாளராக இருப்பதாக அறிமுகமாகிய பழனிச்சாமி, அவரது மகன் கந்தபாலன் மற்றும் நித்தியானந்தம், சந்தோஷ் பாண்டியன் ஆகியோருடன் இணைந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதன்மைச் செயலாளராக பணிபுரிந்த மணிவாசன் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர்கள் மூலம் பெட்ரோல் பங்க் உரிமம் அல்லது தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் ஜே இ பணி வாங்கி தருவதாக சொன்னார்கள். இதற்கு முன்பாக மேட்டூரை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணிற்கு அரசு வேலை வாங்கி கொடுத்ததாகவும் கூறினார்கள். இதனை நம்பி 22 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுப்பணித்துறையில் ஜே.இ பதவிக்கான பணி நியமன ஆணையை தன்னிடம் வழங்கியதாகவும் கூறினார். 



இதனை நம்பி வேலையில் சேர சென்றபோது அந்த ஆணை போலியான நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்ததாக கூறினார். அந்த புகார் சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது போன்ற ஒரு போலியான சான்றிதழ் மற்றும் தமிழ்நாடு அரசு இணையதளத்தில் இருந்து போலி நியமன ஆணையை தமிழ்நாடு அரசு வழங்கியது போன்று போலி நியமன ஆணை உள்ளிட்டவைகளை வழங்கியதாக கூறினார்.


இதனிடையே பழனிச்சாமி தனது செல்போனில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் ஆகியோரிடம் பேச வைத்தாகவும், இருவரும் பழனிச்சாமி தனது வேலை தொடர்பாக சொல்லியுள்ளதாகவும் அவர் சொல்வதைக் கேளுங்கள் என்று சொன்னதாக மகாதேவ் கூறியுள்ளார். எனவே இதன் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறும், பணத்தை மீட்டுத் தரும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இதுதொடர்பாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், ”தமிழ்நாடு டிஜிபிக்கு புகார் அளித்துள்ளார். அதில், "எனது உதவியாளர் வழக்கறிஞர் லட்சுமணபெருமாள் அவர்கள் மேட்டூரை சார்ந்த மகாதேவ் என்பவர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகாரினை பத்திரிக்கையாளரிடம் கொடுத்திருக்கிறார் என என்னிடம் தெரிவித்தார். பிறகு அதை நான் படித்து பார்த்தபொழுது அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பொது வாழ்க்கையில் எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் பொய்யான செய்தியாக உள்ளது. எனவே தாங்கள் இதுசம்மந்தமாக முழு விசாரனை மேற்கொண்டு குறுக்கு வழியில் சட்டத்துக்கு புறம்பாக அரசு வேலை பெறுவதற்கு முயற்சித்த மகாதேவ் என்பவரையும், பணம் பெற்றுக்கொண்டதாக சொல்லப்படும் பழனிச்சாமி என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து முன் உதாரணமாக மேற்படி இருவரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.