தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியிலுள்ள அசோக் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.  இந்த பகுதியில் மாணவ, மாணவிகள் குழந்தைகள் முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே  இந்த பகுதியில் ஒரு செல்போன் டவர் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும்  அசோக் நகர் மையப்பகுதியில் மேலும் ஒரு புதிய டவர் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே இருக்கும் செல்போன் டவர் மற்றும் புதிதாக அமைக்கப்படும் செல்போன் டவராலும்  அதிகப்படியான கதிர்வீச்சுகள் ஏற்படும்.



இதனால்  வெண்ணாம்பட்டி அசோக் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள், இதய நோய் உள்ளவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது. மேலும் முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்தின் போது குறைபாடுடன் குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த பகுதியில் புதியதாக செல்போன் டவர் அமைக்க கூடாது. தொடர்ந்து டவர் அமைக்கும் பணியினை கைவிட வலியுறுத்தி, அசோக் நகர் குதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் செல்போன் டவர் அமைப்பதை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

 



 

காரிமங்கலம் வாரச் சந்தையில்  1  லட்சம் தேங்காய்கள் 15.50  லட்சத்திற்கு விற்பனை



 

தருமபுரி  மாவட்டம், காரிமங்கலத்தில் சந்தைக்கு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேங்காய்களை, தென்னை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம், முதல் ரக தேங்காய், 11 முதல், 18 ரூபாய்க்கும், இரண்டாம் ரக தேங்காய், 15 முதல், 22 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் இன்றைய வாரச் சந்தைக்கு தேங்காய் வரத்து, கடந்த வார்ததை விட அதிகரித்தது. இன்றைய காரிமங்கலம் வாரச் சந்தைக்கு ஒரு இலட்சம் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இன்றைய சந்தையில், முதல் ரக தேங்காய், 12 முதல், 20 ரூபாய்க்கும், இரண்டாம் ரக தேங்காய், 6 முதல் 16 ரூபாய்க்கும் விற்பனையானது.

 



 

இந்த தேங்காய்களை மாலுார், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்றனர். இன்று ஒரு இலட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அவை முழுவதும் விற்பனையானதில் மொத்தம் 15.50 லட்சம் ரூபாய்க்கு தேங்காய்  விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் கடந்த வாரம் தேங்காய் வரத்தும், விற்பனையும் குறைந்த நிலையில், இன்று விலைவுயர்ந்து விற்பனையானது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின், இன்றைய சந்தையில் தேங்காய் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.