கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா மற்றும் அண்டை மாநில மதுபானங்கள் தமிழகத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து கடத்தலை தடுக்க தீவிர வாகன தணிக்கை மற்றும் கர்நாடக மாநில எல்லைகளில் வாகன சோதனை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அந்த வகையில் ஓசூர் அடுத்த மத்திகிரி காவல்நிலைய காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 50 லட்சம் மதிப்பிலான 10 டன் குட்கா, பான்மசாலா மற்றும் போதை பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஓட்டுனரிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் தர்மலிங்கம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3500 லிட்டர் கர்நாடக மதுபான பாக்கெட்டுகள், குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய 12 லட்சம் மதிப்பிலான கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் மதுபான பாக்கெட் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சிறப்பாக செயல்பட்டு அவர்களை பிடித்த காவலர்களை பாராட்டினார். அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் பேசிய அவர் 60 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் மற்றும் 12 லட்சம் மதிப்பிலான லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் 200க்கும் மேற்பட்ட கும்பல் குட்கா கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அவர்களை கண்டறியும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் இனி குட்கா கடத்தல் கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கடத்தபடுவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். மேலும் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். தமிழக எல்லையில் 50 லட்சம் மதிப்பிலான 10 டன் குட்கா மற்றும் 3500 லிட்டர் கர்நாடக மதுபானம் கடத்தலை பிடித்த காவல்துறையினரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.