மத்திய தமிழகத்தில் இரண்டு நாள் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா இன்று சேலத்தில் இரண்டாம் நாள் சுற்றுப்பயணத்தை சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில் இருந்து தொடங்கினார். தாரமங்கலத்தில் சசிகலாவை வரவேற்பதற்காக நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் காலையிலிருந்து காத்திருந்தனர். அப்போது, நேற்று சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் சேலம் தாரமங்கலத்தில் சசிகலாவை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் அதிமுக கொடியை பயன்படுத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சசிகலாவின் ஆதரவாளர்களுடன் காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவு எனக் கூறி காவல் துறையினர் அதிமுக கொடியை சசிகலா ஆதரவாளர்கள் பயன்படுத்த தடை விதித்து அங்கிருந்து அனைத்து கொடிகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

இதைத்தொடர்ந்து தாரமங்கலத்தில் சசிகலாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாரமங்கலத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, கொங்கு மண்டல மக்கள் அன்பாக உபசரித்தார்கள். இது மன மகிழ்ச்சியை தருகிறது என்றார். ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த சசிகலா, ஒருவர் அரசியல் இருப்பதும் இல்லாமல் போவதும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவு. தனி ஒரு மனிதராக யாரும் சொல்ல முடியாது என்று கூறினார். அதனால் தமிழக மக்களளும், கழகத் தொண்டர்களும் யாரை விரும்புகிறார்களோ அவர்களை அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது. தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள் பெரும் ஆதரவு எனக்கு உள்ளது. தமிழக மக்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் அது நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

Continues below advertisement

சேலம் மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவிற்கு பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக நேற்று இரவு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் சசிகலாவை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்களும், அதிமுகவினரும் குவிந்தனர். எடப்பாடியில் சசிகலாவின் வருகைக்கு பட்டாசுகள் வெடித்தும், பூக்களைத் தூவியும், மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் எடப்பாடி பேருந்து நிலையம் அருகிலிருந்த நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்பின் சேலம் கடைவீதியில் உள்ள ராஜகணபதி திருக்கோவிலிலும் சசிகலா தரிசனம் செய்தார். இன்று இரண்டாம் நாளான பயணத்தில் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மேட்டூர் வழியாக பண்ணாரி புறப்பட்டுச் சென்றனர். சசிகலாவின் ஆன்மீகச் சுற்றுப் பயணம் கோவையில் நிறைவடைந்தது.