பெரியார் பல்கலைக்கழகத்தில் நேற்று ஆளுநர் தலைமையில் 21வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு முதுமுனைவர் பட்டம் பெறும் நான்கு பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 605 மாணாக்கர்களுக்கும், முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 99 பேருக்கும் தங்கப் பதக்கத்துடன் பட்டச் சான்றிதழை விழா மேடையில் வழங்கி தலைமையுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக முன்னாள் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். பட்டமளிப்பு விழா நடைபெறுவதன் வாயிலாக சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 53,625 மாணாக்கர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,076 மாணாக்கர்களுக்கும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 6,415 மாணாக்கர்களும் பட்டங்களைப் பெற்றனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21 ஆவது பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்.



இந்த நிலையில், ஆளுநர் சேலம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் கருப்பு சட்டை போராட்டம் மற்றும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்திற்கு சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்தனர். அவரது வருகையை கண்டித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அருகே பல்வேறு அமைப்புகளின் சார்பில் கருப்புக் கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கருப்பு உடை அணிந்து ஆளுநரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 



ஆளுனர் ஆர்.என்.ரவி சனாதனத்துக்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகவும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதை கண்டித்தும், தொடர்ந்து அரசியல் பிரமுகர் போல தமிழக ஆளுநர் செயல்பட்டு வருவதாக கூறி கோஷங்களை எழுப்பினர். ஆளுநர் செல்லக்கூடிய வழியில் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி எதிரே திரளானோர் கருப்பு உடை அணிந்து கைகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் சேலம் மாநகர போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பெரியார் பல்கலைக்கழகம் முழுவதுமாக சேலம் மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.