சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர் ஆளுநருக்கு வரவேற்பு அளித்தனர்.


 இதனையடுத்து நடைபெற்ற பெரியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டச் சான்றிதழை வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் ஜெகநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். அப்போது பேசிய அவர், தேசிய தரவரிசைப் பட்டியலில் பெரியார் பல்கலைக்கழகம் 59 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 5 வருடங்களாக நாட்டின் சிறந்து 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது. சேலம் பகுதி மக்களின் விளையாட்டுத் திறனைத் மேம்படுத்திடும் வகையில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் செயற்கை இழை ஒடுதள மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திறன்மிகு இந்தியா திட்டத்தின் நாட்டில் உள்ள 6 கல்வி நிலையங்களில் ஒன்றாக பெரியார் பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு தொழில்கல்வி பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.‌ தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கெளசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.66 கோடி மதிப்பில் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் துறையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் தகவல் தொழில்நுட்பவியல் தொழில் மையம் ரூ.5 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வி சார் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.112 கோடி மதிப்பில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசுக்கு முன்மொழிவு அனுப்ப்பட்டுள்ளது என்றார் அவர்.


 


இந்நிகழ்வில் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவன முன்னாள் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பட்டமளிப்பு விழா உரையாற்றிய அவர், நாட்டின் உயர்கல்வி அமைப்பு கடந்த 75 ஆண்டுகளில் 150 மடங்கு அதிக வளர்ச்சி கண்டுள்ளது. வரும் 2035 ஆம் ஆண்டிற்குள் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்திடும் வகையில் புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்கேற்ப பல்கலைக்கழகங்கள் அனைத்து தரப்பினருக்கான கல்வி வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். பட்டப்படிப்பை பாதியில் கைவிட நேர்பவர்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்வேறு வாய்ப்புகள் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக தேவையான அனைத்து பயிற்சிகளையும் கல்வி நிலையங்கள் வழங்கிட வேண்டும். மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த திறமைகளை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் கல்வியின் பலன் நாட்டிற்கு கிடைப்பதற்கு அவர்கள் உறுதியேற்க வேண்டும். வகுப்பறைகளைத் தாண்டி துறை சார்ந்த அறிவை மேம்படுத்திக் கொள்ள கிடைக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலகளவில் 3-வது பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா திகழ்கிறது. இதனை மேலும் உயர்த்திடும் வகையில் மாணவர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். இந்தியத் திருநாட்டை சர்வதேச அரங்கில் வல்லரசு நாடாக மாற்றிடும் வகையில் அமிர்த காலம் என அழைக்கப்படும் அடுத்த 25 ஆண்டுகளில் இளைஞர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கூறினார்.


 


இதனையடுத்து, பெரியார் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பை நிறைவு செய்த 505 மாணவ-மாணவியருக்கு, முனைவர் பட்டச் சான்றிதழை வழங்கினார். தொடர்ந்து, இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களில் துறை வாரியாக முதலிடம் பிடித்த 99 மாணவ-மாணவியருக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டச் சான்றிதழையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.


இந்நிகழ்வின் மூலம் சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 61 ஆயிரத்து 413 பேர் பட்டங்களை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.