தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சக்கரை, செங்குரும்பு, ரொக்கம் ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கரும்புகளை அந்தந்த மாவட்டத்தில் பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

 

இந்நிலையில் உள்ளூரிலேயே கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், பற்றாக்குறை ஏற்பட்டால், அதனை அருகில் உள்ள மாவட்டங்களில் பெறலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் 4.70 இலட்சம்  குடும்ப அட்டைகள் உள்ளன. இதற்கு 4,70,000 கரும்புகள் தேவைப்படுகிறது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் சாந்தி குழு அமைத்து தருமபுரி மாவட்டத்தில் செங்குரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடம், கரும்பு கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 



 

 

மேலும் கரும்பின் உயரம் ஆறடி இருக்க வேண்டும், தடிமனாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம், வேளாண் துறை அதிகாரிகள், கூட்டுறவு துறை சார்பதிவாளர், விஏஓ உள்ளிடாடோர் நேரடியாக சென்று வயலில் செங்கரும்பின் தரத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 6 அடி உள்ள கரும்புகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படும், ஆறு அடிக்கு குறைவாக இருந்தால் அந்த கரும்புகள் நிராகரிக்கப்படவுள்ளது. தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான செங்கரும்புகளை உள்ளூரில் கிடைக்கின்ற அளவு போக தேவையான அளவினை சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளனர். 

 



 

இதனையடுத்து தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் செங்கரும்பு பயிரிட்டுள்ள விவசாய நிலங்களுக்கு வேளாண்துறை அலுவலர் குமார் தலைமையில் அலுவலர்கள், காந்தி நகர், அச்சல்வாடி, பேதாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பின் தரத்தினை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அரசு உத்தரவின்படி கரும்புகள் தடிமன் தரமாக இருக்கிறதா ஆறடி உயரம் இருக்கிறதா என அளவீடு செய்து பார்க்கின்றனர். மேலும் இனிவரும் காலங்களில் அரசே கரும்பை கொள்முதல் செய்ய உள்ளதால் அதிகப்படியான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர். 

 

இதனையடுத்து கரும்பு விவசாயிகளிடம் கரும்புகளின் எண்ணிக்கை மற்றும் பெயர் விவரம், வங்கிக் கணக்கு எண், சிட்டா, அடங்கல் ஆதார்  உள்ளிட்ட ஆவணங்களை சேகரித்து, அரசு வழங்கியுள்ள விண்ணப்பத்தில் கையொப்பம் பெற்று செல்கின்றனர். மேலும் பொங்கல் தொகுப்பில் வழங்கக் கூடிய செங்கரும்புகளை உள்ளூர் விவசாயிகளிடமே கரும்பு கொள்முதல் செய்யப்படுவதால் செங்குரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.