பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா கட்சியில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் மிக உற்சாகமாக மிக வேகமாக உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.


இதுவரை நடைபெற்ற எந்த தேர்தலிலும் திமுக, கூட்டணி கட்சிகள் இன்றி தனியே நிற்கவில்லை என்று கூறிய பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வலு நிறைந்ததாக எந்த கட்சியும் இல்லை என்றும் கூறினார்.



விசிக மது ஒழிப்பு மாநாடு:


மது ஒழிப்பிற்காக யார் மாநாடு நடத்தினாலும் அது பாராட்டுக்குரியது. இதில் அரசியல் ஆதாயம் தேட யாரும் முயற்சிக்கக் கூடாது என்று கூறிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பொதுவான பிரச்சனைக்காக மாநாடு நடத்த திட்டமிட்டு விட்டு பாரதிய ஜனதா கட்சியை மட்டும் அழைக்க மாட்டேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுவது அவரது பார்வையில் கோளாறு இருப்பதை காட்டுவதாக விமர்சித்தார்.


நடிகர் விஜய் அரசியல் வருகை நல்வரவாக அமையட்டும் என்று வாழ்த்து தெரிவித்த பொன் ராதாகிருஷ்ணன் அரசியலில் பகையாளி என்று யாரும் இல்லை. தமிழக நலனுக்காகவும் தமிழர் நன்மைக்காகவும் அனைவரும் சேர்ந்து போராட வேண்டும் என்று கூறினார்.



அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் அங்கு பல்வேறு நிறுவனங்களை அழைத்து பேசும் செய்தி பெரிதாக மக்களைச் சென்றடையவில்லை. ஆனால் சென்னை அரசு பள்ளியில் நடந்த நிகழ்வு சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாக கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அரசு பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளார். தமிழ்நாட்டில் அரியலூரில் நடைபெற்ற ரயில் விபத்தின் போது அப்போது மத்திய ரயில்வே அமைச்சர் தானாக முன்வந்து பதவி விலகினார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரை இலாகாவையாவது குறைந்தபட்சம் முதலமைச்சர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.


பள்ளிப் பாடங்களில் அரசியல் தலைவரின் பாடங்களை வைப்பதில் ஆர்வம் காட்டும் திமுக அரசு, ஔவையாரின் நல்ல பாடல்களையும் நாலடியார் உள்ளிட்ட பாடங்களையும் நீக்கி உள்ளதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். 


இனிப்பு மற்றும் கார வகைகள் ஒரே ஜிஎஸ்டி வழங்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு, இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சர் கருத்து கேட்கப்படும் என கூறியுள்ளார். அனைவரின் கருத்தும் பெறப்பட்டவுடன் உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்று கூறினார்.


பேட்டியின் போது சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சுரேஷ் பாபு, கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.