சேலத்தில் பாமக சார்பில் நடைபெற்ற சமூக நீதி விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "அண்ணா, பெரியார் என பேசும் திமுகவில் கட்சியில் சமூக நீதி இருக்கிறதா என்று தெரியவில்லை. அமைச்சர் பொறுப்பில் சமூக நீதி பின்பற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் எல்லா சமுதாயங்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும். பெரும்பாலான சமுதாயத்தினருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. 131 திமுக எம்எல்ஏக்களில் 23 பேர் வன்னியர்களாக இருக்கும் நிலையில், மூன்று அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 21 எம்எல்ஏக்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் மூன்று அமைச்சர் பதவிகளே வழங்கப்பட்டுள்ளது.
12 பேர் முக்குலத்தோர் எம்எல்ஏக்களில் 5 பேர் அமைச்சர்கள், ரெட்டியார் சமூகத்தில் 2 பேர், கவுண்டர் சமூகத்தில் 3 அமைச்சர்கள், முதலியார் சமூகத்தில் 2 அமைச்சர்கள், இசை வேளாளர் சமுதாயத்தில் முதலமைச்சர், விளையாட்டுத் துறை அமைச்சர், யாதவ சமூகத்தில் 2 பேர், நாடார் சமுதாயத்தில் 3 அமைச்சர்கள், படுகர் சமுதாயத்தில் ஒருவர், முத்தரையர் சமூகத்தில் ஒருவர், மீனவரில் ஒருவர், முஸ்லீம் சமூகத்தில் இருவர் என பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிக எம்எல்ஏக்களை வழங்கிய வன்னியர் மற்றும் பட்டியல் இன சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. சமூக நீதி பேசும் திமுக அதிக எம்எல்ஏக்களை தந்தவர்களுக்கு அளிக்கும் மரியாதை இதுதான். முக்கிய துறைகளும் பட்டியல் இன சமூகத்திற்கு வழங்கப்படவில்லை.
ஓட்டு போடுவதற்கும், கோஷம் போடுவதற்கும் மட்டுமே இரு சமூகங்கள் பயன்படுகிறது. முன்னேறாமல் ஓட்டுப் போடும் அடிமைகளாக இருக்க வேண்டும் என்றே திமுக நினைக்கிறது. இரு சமூகத்தினரும் பெரும்பான்மையாக வசிக்கும் வடமாவட்டங்களில் எந்த தொழிற்சாலையும் வேலைவாய்ப்பும் இல்லை. கல்வியிலும் முன்னேற்றம் இல்லாத மாவட்டங்களாக உள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக இந்த நிலைதான் உள்ளது. கல்வியில், தனிநபர் வருமானத்தில் கடைசி இடத்தில் இருக்கும் வடமாவட்டங்கள், மதுவிற்பனையில் மட்டும் முதலிடத்தில் உள்ளது. மக்களை சிந்திக்க விடாமல் தடுக்கவே மதுவிற்பனை செய்யப்படுகிறது. தேர்தல் நேரத்தில் ஒரு கையில் ரூ.500 கொடுத்து விட்டு, மற்றொரு கையில் மண்ணை கொடுக்கின்றனர். தன் தலையில் தானே மண் போட்டுக் கொள்ளும் நிலையை திமுக உருவாக்குகிறது.
நான் வன்னியராக பிறந்தது என் தவறா ?
பணம் கொடுப்பவருக்கு விசுவாசமாக இருக்கும் மக்கள், அவர்களுக்காக போராடும் எங்களுக்கு ஆதரவளிப்பதில்லை. பணம் கண்ணை மறைத்து விடுகிறது. போராடி போராடி தொண்டை தண்ணீர் வற்றி ஜெயிலுக்குப் போய் நடத்தும் போராட்டத்தை ரூ.500 முடித்து விடுகிறது. 108 ஆம்புலனஸ் , புகையிலை ஒழிப்பு, நீர் மேலாண்மை என எவ்வளவு நல்ல திட்டங்களை சொல்லி விளக்கம் அளித்தாலும், அன்புமணி என்றால் அவருக்கு பின்னால் இருக்கும் ஜாதிதான் கண்ணை உறுத்துகிறது.
இந்த ஜாதியில் பிறந்தது தான் தப்பா அதற்கு நான் என்ன செய்தேன்? மற்றவர்கள் உங்களை கொள்ளையடிக்கலாம், கொள்ளையடிப்பவர்கள், கொலை செய்பவர்கள், சாராயம் விற்பவர்களுக்கு ஓட்டுப் போடுபவர்கள், அன்புமணி பின் இருக்கும் ஜாதியை மட்டும் நெருடலாக பார்க்கிறார்கள். இதில் யாருக்கு ஜாதி வெறி பிடித்துள்ளது. ஒரு முறை கொடுத்து பாருங்கள். 5 ஆண்டுகள் வேண்டாம். 2 ஆண்டுகள் கொடுத்து பாருங்கள். வெறும் வாய்ப் பேச்சு பேசவில்லை. பதவி கிடைத்த போது அதை பயன்படுத்தி பல்வேறு சாதனைகளை செய்துள்ளேன். அன்றை பிரதமர் மன்மோகன் சிங், 50 ஆண்டு காலம் செய்யாத்தை, அன்புமணி 5 ஆண்டுகளில் செய்துள்ளதாக பாராட்டியுள்ளார். நல்லவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்போது 40 பேரை தேர்ந்தெடுத்து அனுப்பி உள்ளீர்கள். அவர்கள் யார் என்பது கூட தெரியாமல் ஓட்டு போட்டு உள்ளீர்கள். நல்லவர்களாக கெட்டவர்களா என பார்க்காமல் கட்சி சின்னம் மற்றும் பணத்தை பார்த்து விட்டு வாக்களித்து விட்டனர். கடந்த 5 ஆண்டு காலம் நல்லது நடக்கவில்லை. இந்த 5 ஆண்டுகாலமும் நல்லது நடக்க போவதில்லை. மக்களை அதிகம் குற்றம் சொல்ல முடியவில்லை. சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சியில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என யாரும் மகிழ்ச்சியாக இல்லை. திமுகவினர் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளனர். காசு இல்லாமல் எந்த அரசு அலுவலகத்திலும் வேலை நடப்பதில்லை. எந்த துறையும் சரியாக இல்லை. எல்லா அமைச்சர்களுக்கும் சவால் விடுக்கிறேன்.
எந்த துறையாக இருந்தாலும் விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன். என்ன செய்தேன் என்று சொன்னால், எதையெல்லாம் செய்யவில்லை என்று சொல்ல பெரிய பட்டியலே உள்ளது. சேலத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. செட்டிச்சாவடி பகுதியில் குப்பைகளை கொட்டுவது மட்டுமல்லாம், அதை எரித்தும் வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும். 550 டன் கழிவுகள் அங்கு கொட்டப்பட்டுள்ளது. இதற்கு உலக அளவில் பெரிய திட்டங்கள் உள்ளன. குப்பையை எடுத்துக் கொண்டு போய், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் வீடுகள் முன்பு கொட்ட வேண்டும். வேறு வழியின்றியே இதை செய்ய வேண்டியுள்ளது" என்று பேசினார்.