சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், குழுத்தலைவர் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரக குடிநீர் இயக்கம், பாரத பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பிரதமர் குடியிருப்புத்திட்டம், தூய்மை பாரத இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி வளர்ச்சித்திட்டம், பாரத பிரதமர் ஆதர்ஸ் கிராம யோஜனா, தீன் தயாள் அந்தோதயா யோஜனா, சமூக பாதுகாப்பு திட்டம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு திட்டம், சீர்மிகு நகர திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம், பிரதான் மந்திரி கௌரவ நிதித் திட்டம், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறுத் திட்டங்களின் கீழ் சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணி முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, மாநில அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதன் நிலைகள் குறித்து அதிகர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அது குறித்த விளக்கங்களை ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளும் தனித்தனியாக இருந்து திட்டங்கள் குறித்தும் அதன் நிலைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
இந்த நிலையில் சேலம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் பேசுகையில், மாநில அரசுகளின் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் அதிகாரிகள் மத்திய அரசின் திட்டங்களை ஏன்? மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தயக்கம் காட்டுவதாக கேள்வி எழுப்பினார். மேலும் மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் சேராததால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தெரிவித்தார். குறிப்பாக மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அதிகாரியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நிலையில் அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறினர்.
பின்னர், கூட்டத்தில் பேசிய குழுத் தலைவரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி, அனைத்து திட்டப்பணிகளும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.திட்ட செயல்பாடுகளின் இடர்பாடுகளை களைய ஒருங்கிணைந்த வழிகளை அறிந்து மாவட்ட திட்டக்குழுவின் முன்னுரிமை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக காலதாமதமில்லாமல் பணிகள் மேற்கொள்ளப்படும்போது அதன்பயன் முழுமையாக பயனாளிகளுக்கு கிடைக்கப்பெறுகின்றது. அரசால் தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தையும் முறையாக செயல்படுத்தும் அதிகாரம் அரசு அலுவலர்களுக்கே உள்ளது. அரசின் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படும்போது கவனமுடன் தகுதியுடைய பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். அதேபோன்று தேவைப்படும் பணிகளை அரசின் திட்டங்கள் வாயிலாக விரைந்து செயல்படுத்திட அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பொன்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.