தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டம்-போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு தருமபுரி மாவட்ட தலைவர் கரூரான், மாவட்ட பொருளாளர் தமிழ்செல்வி, ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.தருமபுரி மாவட்ட செயலாளர் மாரிமுத்து போராட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மாநில பொதுச் செயலாளர் நம்புராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இந்த போராட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் மூலம் மதம்தோறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தால் நடத்தப்படும் முகாம்களிலேயே அனைத்து வித அடையாள சான்றிதழ்கள், பயண சலுகை சான்றிதழ்கள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைத்து வழங்கிட வேண்டும், மாற்றுத் திறனாளி உதவித்தொகை வருவாய் துறையில் இருந்து மாற்றுத் திறனாளி அலுவலகத்திற்கு மாற்றும் போது அலுவலக ரீதியான ஆவண மாற்றங்களை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் உதவித்தொகை வங்கி ஏடிஎம் மூலமாக பெறுவதற்கு நடவடிக்கை வேண்டும், உடல் ஊனத்தின் சதவீதத்திற்கு ஏற்ப விதிமுறைகளுக்கு உட்பட்டு சான்றிதழ்கள் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும்போது முகவரி மாற்றம் எளிதாக செய்ய வேண்டும். அதேப்போல் வங்கிகள் மூலம் அரசு திட்டங்களின் கடன் உதவிகளை மானியத்துடன் வழங்க வேண்டும். மேலும் அரசுத்துறைகள் மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும்.
அனைத்து அரசு அலுவலங்களில் மாற்றுத் திறனாளிகள் சென்று வர எதுவாக சாய்த்தால மேடைகளையும், தனி கழிப்பறைகளையும் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த குடியேறும் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் ஆட்சியர் அலுவலகம் சொல்லும்போது காவல்துறையினர் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் குண்டு கட்டாக தூக்கிச்சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். இதனால் காவல் துறையினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.