திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்காதது, தமிழக முழுவதும் நடைபெறும் லாக் அப் மரணங்கள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காதது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டார்.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம், திமுக அரசு தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தவில்லை என்றும் குடும்பத்திற்கு தேவையான திட்டத்தினை மட்டுமே செயல்படுத்தி திமுக ஆட்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார். சேலம் மாநகராட்சி உள்பட மாநிலத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் எந்தவித வளர்ச்சி திட்ட பணிகளும் தமிழக அரசின் சார்பில் செய்து தரப்படவில்லை என்றும் மத்திய அரசு நிதியில் தான் உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தி வரும் மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக குறை கூறிய கே.பி.ராமலிங்கம் உள்ளாட்சி அமைப்பு பணிகளுக்கு என தமிழக அரசு செய்துள்ள நிதி ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார். திமுக அரசியல் ஸ்டிக்கர் அரசாக உள்ளது குறிப்பாக தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி நிதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் திமுக நிதி வழங்கியது போல ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு விளம்பரம் தேடிக் கொண்டுள்ளனர். தமிழகம் போதை சந்தையாக மாறிவந்துள்ளது என்றும் கல்வி கூடம் திருக்கோவில் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சர்வ சாதாரணமாக போதைப் பொருள்கள் உள்ளதாகவும்  ஆளுங்கட்சியான திமுகவினர் காவல்துறையில் தலையிடுவதுதான் என்றும் தெரிவித்தார். 



தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலமாக பாலியல் வன்கொடுமை, லாக்கப் டெத் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் பெண்கள் சுதந்திரமாக நடமாடாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு காரணம் திமுக அரசு தான் என தெரிவித்தார். சமூக நீதி காவலர் என்று தன்னை பெருமை கூறிக்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்,  மலைவாழ் இனத்தை சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவு தராமல் மேட்டுக்குடி வேட்பாளருக்கு ஆதரவு தருவது வேதனையாக உள்ளது. மக்கள் விரோத ஆட்சியாக செயல்பட்டு வரும் திமுக அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும் தெரிவித்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண