தருமபுரியில் அரசு புறம்போக்கு நிலம் 42 ஏக்கரில் 75,000 மரங்களை நட்டு வளர்த்து பராமரித்து சாதனை படைக்கும் ஊராட்சி மன்ற தலைவர்-அரசு வழங்கிய விருதால், மகிழ்ச்சியடைந்துள்ள கிராமமக்கள்.

 

தருமபுரி மாவட்டம் எர்ரபையன அள்ளி ஊராட்சி காடு, மலை பாங்காக மேடு பள்ளமாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள், காடுகளாக, மலை போன்ற முகடுகளாக இருந்த வருகிறது. இதனை அக்கம் பக்கத்திலிருக்கும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.  காடுகளை அழித்தும், மரங்களை வெட்டுவதால், போதியமழையில்லாமல், குடிநீருக்கு அவதிப்படும் நிலையும், மறுபுறம் சுற்று சூழல் மாசடைந்து வருகிறது. இதனால் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டுமென்று இடத்தினை தேடினார்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிக்கும் சிலம்பரசன் எர்ரபையனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கரடுமுரடாக இருந்த 42 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை, அடையாளங்கண்டார். தொடர்ந்து அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த திவ்யதர்சினியிடம், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அனுமதியும், உதவியும் வழங்க வேண்டும் என்று நாடினார். இதற்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியவுடன், இந்த கரடுமுரடான பகுதிகளில் இருந்த முட்புதர்களை அகற்றி, மேடான பகுதிகளை மேடாகவும், பள்ளமான பகுதிகளை பள்ளமாகவும் அதன் போக்கிலே இயந்திரங்களை வைத்து சீர்படுத்தினார். இதனை தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு சமன்படுத்தினார். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, மாவட்ட ஆட்சியராக திவ்யதர்சினி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இங்க நடப்பட்டுள்ள மா, பலா, கொய்யா, நாவல், அத்தி, சப்போட்டா, அரசன், புங்கன், வேம்பு, புளியம், முருங்கை, பாக்கு, தேக்கு, தென்னை உள்ளிட்ட 75,000 மரக்கன்றுகளுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் தினமும் ஆட்களை வைத்து, தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையை போக்க, காடுகளாலிருந்து வரும் மழை நீரை தடுத்து, தண்ணீரை எடுக்க திட்டமிட்டார்.

 



 

 

இதறக்கு தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இப்பகுதியில் தடுப்பணை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.  இந்த தடுப்பணையில் இருந்து தண்ணீரை எடுத்து இங்கு நடப்பட்டுள்ள செடிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இதைத்தவிர மூன்று ஏக்கர் பரப்பளவில் குறுங்காடு ஒன்றும் வளர்க்கப்பட்டு வருகிறது.  மா, கொய்யா, சப்போட்டா, பலா உள்ளிட்ட 20 வகையான பழ மரங்களும், புளி, தேக்கு, தென்னை, முருங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன. இப்பகுதியில் பறவைகள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளது.  பல்லுயிர் பெருக்க திட்டத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
  

 



 

 

மேலும் இங்கு தேக்கு, தேக்கு, தென்னை போன்ற நீண்ட நாள் பலன் தரக்கூடிய பணப் பயிர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதேப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட மா மரங்கள், தற்போது நல்ல மகசூல் கொடுத்து வருகிறது. இந்த மாம்பழங்கள் அறுவடை செய்து, விமானம் மூலம் சிங்கப்பூர், மலேசிய போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும்  இந்த மரங்களால் கிடைக்கும் வருவாயை,ஊராட்சி வங்கி கணக்கில் செலுத்தி இதன் மூலம் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.5 முதல் 10 இலட்சம் வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதல்வரால் பசுமை முதன்மை சாதனையாளர் விருது ரூ.1 இலட்சம் காசோலையுடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிதியையும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, சுற்றுசுவர் அமைத்து, இயற்கையை பாதுகாக்கும் பணிக்கு பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 



 

 

மேலும் மாவட்ட நிர்வாகம் சமுதாய கிணறு, ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட வசதிகளை இந்த மரங்கள் நடப்பட்டு உள்ள பகுதியில் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறைவேற்றி தரும் என்று நம்புவதாகவும் தெரிவிக்கிறார். இந்த ஊராட்சி மன்ற தலைவரை போல எல்லா ஊராட்சி மன்ற தலைவரும் தங்கள் பகுதியில் உள்ள அரசு நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், பருவமழை, நிலத்தடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல், இயற்கையை பாதுகாத்து, பசுமை தமிழகமாக மாறும்.