தொடர் மழையால் பஞ்சப்பள்ளி சின்னார் அணையில் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், கிராமப் புறங்களிலும் வயல்வெளியில் நுழைந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளது.


தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே நிரம்பி வந்தது. இந்நிலையில் தொடரும் நீர் வரத்தால் அணையிலிருந்து வினாடிக்கு 4500 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் தளி,  தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஒரு சில ஏரியில் உடைப்பு ஏற்பட்டு சின்னாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.



தருமபுரி: பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பி கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர் - மக்கள் அவதி


இதனால் நள்ளிரவு சின்னாறு அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 28,000 கன அடியாக உயர்ந்தது. இதனை அறிந்த பொதுப்பணித்துறை அலுவலர்கள் நள்ளிரவு 2 மணிக்கு அணையில் உள்ள எச்சரிக்கை அலாரத்தை ஒலிக்க விட்டு கிராம மக்களுக்கு ஆற்றோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும் வருவாய்த் துறையினர் உடன் இணைந்து அனைவரும் ஒட்டியுள்ள கரகூர், பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, சாமனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு நேரடியாக எச்சரிக்கையும் விடுத்தனர்.




இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னார் அணையில் வினாடிக்கு 28,000 கன அடி நீர்வரத்தால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து இரு கரைகளுக்கு மேல் விவசாய நிலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் மூழ்கி அருகில் உள்ள கிராமங்களில் தண்ணீர் நுழைந்தது. இதனால் கிராம பகுதியில் ஆற்றோரம் இருந்த வீடுகளை தண்ணீர் சூழ்ந்து கட்டடங்கள் இடிந்து விழுந்தது. மேலும் ஆற்றோரமுள்ள வாழை, நெல், மஞ்சள், தக்காளி உள்ளிட்ட பயிர்களை அடித்துச் சென்று பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த பகுதியில் தென்னந்தோப்பு மற்றும் ஆற்றோரம் கொட்டி வைத்திருந்த 50,000 தேங்காய்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.




இதனால் விவசாயிகளுக்கு சுமார் 5 இலட்சம் ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குரியது வருகின்றனர்.  தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வருவாய்த் துறையினரும், தோட்டக்கலை மற்றும் வேளாண் துறையினர் பயிர்களின் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். ஆனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதிப்பை முழுமையாக அடையாளம் காண முடியாமல் வருவாய்த் துறையினர் தவிர்த்து வருகின்றனர். தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு சின்னாற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கினை இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு கண்டு ரசித்து, மகிழ்ந்து வருகின்றனர்.