சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன் பாளையத்தில் உலகிலேயே மிகப்பெரிய முத்து மலை முருகன் கோயில் உள்ளது 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உள்ளது. இக்கோவிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திற்கு சென்னையில் இருந்து வருகை தந்தார். அப்போது சேலம் செல்லும் வழியில் முத்து மலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கொட்டும் மழையிலும் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. ராஜா அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட முத்து மலை முருகன் காட்சளிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு யாகத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வின் போது சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரத்தில் பூகம்பம் வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் தங்களுக்கு ஆதரவாக இல்லாத அதிமுகவின் நிர்வாகிகளை நீக்கியும், பதவி கொடுத்தும் அறிக்கை வெளியிட்டு வந்தனர். இந்தநிலையில், அதிமுக கட்சி யாருக்கு என்ற வழக்கு உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஓ. பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அளித்தனர்.
இருப்பினும், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களை அதே இருக்கையில் உட்கார அனுமதியளித்தார். இதனை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அன்று மாலை விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.