வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் அதிக கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதாக சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவ சண்முகராஜா தெரிவித்தார்.
சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் சிவ சண்முகராஜா மேட்டூர் அணையில் ஆய்வு செய்தார். மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி அணை 16 கண் பாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர் அணை நிரம்பியவுடன் உபரி நீர் திறப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது மேட்டூர் அணையில் உள்ள நீர் பச்சை நிறத்தில் காட்சியளித்தது. சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அது குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் கர்நாடக மாநிலத்தில் கழிவுகள் கலப்பதால் மேட்டூர் அணையில் வரும் காவிரி நீரானது பச்சை நிறத்தில் வருவதாகவும், அதற்கென தனி குழுவை கொண்டு பொதுப்பணித்துறை சார்பில் சுத்தம் செய்து வருவதாக கூறினார். மேலும், மேட்டூர் அணையின் இடது கரை, தண்ணீர் வெளியேற்றப்படும் பகுதிகள், சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவ சண்முகராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவ சண்முகராஜா செய்தியாளர்களை சந்தித்த அவர், மேட்டூர் அணையில் தற்போது 119 அடி தண்ணீர் உள்ளது. வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் அதிக கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை முதல் 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய உடன் உபரி நீர் திறப்பது குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சேலம் மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் மேலாண்மை பயிற்சியும் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சிவ சண்முகராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேட்டூர் அணை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆய்வின்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மேட்டூர் சார் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், மேட்டூர் அணை செயற்பொறியாளர் தேவராஜன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.