செல்போன் டவரில் ஏறி மேஸ்திரி தற்கொலை மிரட்டல் - லஞ்சம் தந்தும் பட்டா மாற்றி தர மறுப்பதாக புகார்

’’தாசில்தாருக்கு ரூபாய் 25 ஆயிரம் கொடுத்ததாகவும், அதில் அவர் தனக்கு 14 ஆயிரம் பணம் கொடுத்துவிட்டு மீதி பணம் தரவில்லை என புகார்’’

Continues below advertisement
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை ஏலகிரியான்  கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி விவசாயி. இவருக்கும் 6 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதில் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பெரியசாமிக்கு சொந்தமாக ஏலகிரியான்கொட்டாயில்  விவசாய நிலம் உள்ளது. இது அனைவருடைய பெயரிலும் கூட்டுபட்டா வாக உள்ளது. இதில் விஸ்வநாதன் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும் திருப்பதி (11), என்ற மகனும் அப்ஷரா (9) என்ற மகளும் உள்ளனர்.
 

 
இந்த நிலத்தில் விஸ்வநாதனுக்கு 70 சென்ட் நிலத்தை பிரித்து கொடுத்து உள்ளனர். இதற்கு பட்டா வழங்க கேட்டு பல மாதங்களாக தாசில்தார் அலுவலகத்திற்கு  அலைந்துள்ளார். தனி பட்டா கேட்டு பல மாதங்களாக அலைந்து வந்ததாகவும், இதற்காக தாசில்தாருக்கு ரூபாய் 25 ஆயிரம் கொடுத்ததாகவும், அதில் அவர் தனக்கு 14 ஆயிரம் பணம் கொடுத்துவிட்டு மீதி பணம் தரவில்லை.  மேலும் தற்போது இருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கு 30 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் பட்டா மாறுதல் செய்து தரவில்லை. இதனை வருவாய் துறையினரிடம் விஸ்வநாதன் கேட்டுள்ளார். அப்பொழுது மற்ற சகோதரர்கள் கையெழுத்து போடாத காரணத்தினால், பட்டா வழங்க இயலாது என வருவாய் துறையினர் கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த விஸ்வநாதன் இன்று காலை 8 மணியளவில் அதியமான்கோட்டை காலபைரவர் கோயில் அருகில் உள்ள 100 அடி  செல்போன் டவரில், கயிறுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் தனக்கு தனி பட்டா வழங்க வேண்டும், இல்லையெனில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
 

 
இதனையடுத்து தருமபுரி டி.எஸ்.பி அண்ணாதுரை, அதியமான் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, தாசில்தார் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், தருமபுரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா மற்றும் வருவாய் துறையினர், செல்போன் டவர் மேல் இருந்த விஸ்வநாதனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் எனக்கு உடனடியாக பட்டா வழங்கினால் மட்டுமே கீழே இறங்குவேன். தனது மனைவி ரஞ்சிதம் பெயரில் பட்டா வழங்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் டவர் மீது ஏறும் பொழுது யாராவது மேலே ஏறினால் நான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார்.
 
இதனையடுத்து தருமபுரி டி.எஸ்.பி. அண்ணாதுரை, விஸ்வநாதனிடம், சமரச பேச்சுவார்த்தை நடத்தி, பட்டா வழங்க ஆவண செய்வதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து விஸ்வநாதன் கீழே இறங்கினார். தொடர்ந்து விஸ்வநாதன் மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுத அழுதனர். தொடர்ந்து செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விஸ்வநாதனை அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து 5 மணி நேரமாக விவசாயி விஸ்வநாதன் டவர் மீது போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Continues below advertisement
Sponsored Links by Taboola