தருமபுரி மாவட்டத்தில், நேற்று மாலை ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதே போல் பென்னாகரம் அடுத்துள்ள நாகர்கூடல், ஏலகிரி, நாகாவதி அணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு விடிய விடிய தொடர் மழை பெய்து. இசனால்  நாகாவதி ஆற்றில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மிகப் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நாகாவதி ஆற்றில்  ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக  ஆற்றில், சுமார்  9 கிலோ மீட்டர் தொலைவு வரை தண்ணீர் தேங்கி நிற்பதால், அரகாசனஅள்ளி, ஆர்.ஆர்.ஹள்ளி, பூதநாயக்கன்பட்டி, சின்னம்பள்ளி, பெரும்பாலை சோளிகவுண்டனூர், பெத்தானூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட  கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் நிலத்தடி நீரும் உயரும் என்பதால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் நாகவதி அணை முழு கொள்ளளவை எட்டினால் விவசாயத்திற்காக தண்ணீா் திறந்து விடப்படும். இதனால் 22 கிலோ மீட்டர் தொலைவு வரை விவசாய பாசனத்திற்கு கால்வாய் மூலம் தண்ணீர் திறந்தால் விவசாயம் செழிக்கும். மேலும் தொடர் மழை காரணமாக கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு நாகாவதி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 



 

 

 



பாப்பிரெட்டிபட்டி அடுத்த தென்கரை கோட்டை ஏரி நிரம்பியதால், உபரிநீரை பூஜை செய்து மலர் தூவி இனிப்பு வழங்கிய கிராம மக்கள் 

 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த தென்கரை கோட்டை ஏரி சுமார் 84 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு வாணியாறு அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் மற்றும் ஓந்தியாம்பட்டி ஏரியின் உபரிநீரின்  தண்ணீர் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஏரி மூலம் ஜம்மணஹள்ளி ஏரி, ஆலமரத்துப்பட்டி ஏரி, நாகப்பட்டி ஏரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஏரியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது.

 



 

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சேலம் மாவட்டம் ஏற்காடு மலை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், வாணியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  இதனால் வினாடிக்கு 340 கனஅடி தண்ணீர், உபரி நீராக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.  கடந்த ஒரு வாரமாக தென்கரை கோட்டை ஏரிக்கு வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.   இதனால் தற்பொழுது ஏரி நிரம்பி கோடி எடுத்து, தண்ணீர் வெளியேறி வருகிறது. 

 

இந்நிலையில் தென்கரைகோட்டை கிராம மக்கள், ஏரி கோரிடியில் பூஜை செய்து மலர்களை தூவி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் இந்த தண்ணீர் ஜெலகண்டேஸ்வரர் கருட விஜயன் ஆற்றின் வழியாக ஆலமரத்துப்பட்டி, கொளகம்பட்டி ஆகிய ஏரிகளுக்கு செல்கிறது. கடந்த ஆண்டு  பெய்த மழையில் இதே ஆண்டில் ஜனவரி மாதம்  தென்கரைகோட்டை  ஏரி நிரம்பியது. தொடர்ந்து இந்தாண்டு இரண்டு மாதம் முன்னதாகவே ஏரி நிரம்பி உள்ளதால் விவசாயிகளும் பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்