தருமபுரி மாவட்டம் அரூர் பெரிய ஏரி சுமார் 170 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு  கொளகம்பட்டி  கல்லாற்றின் குறுக்கே உள்ள கார ஒட்டு  பகுதியில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பகுதி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால்   வாணியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வாணியாறு அணையில் இருந்து சுமார் ஒரு மாத காலமாக உபரி நீர் வெளியேறுகிறது. இந்த உபரி நீரால், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், பறையப்பட்டிபுதூர், தென்கரைக்கோட்டை உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழிகிறது. இந்த  தண்ணீர் கல்லாற்றில் கலந்து, வாணியாறு வழியாக தென்பெண்ணை ஆற்றுக்கு செல்கிறது. 



 

இந்நிலையில் தென்கரைகோட்டை ஏரி நிரம்பி உபரிநீர் கல்லாற்றில் செல்கிறது. மேலும் கல்லாற்றில்  கொளகம்பட்டி அருகே உள்ள ஒரு கார ஒட்டு தடுப்பணை உயரம் குறைவாக இருப்பதால், அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பில்லாமல் உள்ளது. இதனை அறிந்து அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் உதவியுடன், அழகு அரூர் தன்னார்வ அமைப்பினர் தடுப்பணையில் இன்று 500 மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 


 

தொடர்ந்து இன்று இரவு கல்லாற்றில் உள்ள ஒட்டுக்கு தண்ணீர் வந்ததும், அரூர் பெரிய ஏரி தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால், அரூர் நகர் பகுதியில் சுமார் 5 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. மேலும் அரூரை  சுற்றி சுமார் 20 கி.மீ தூரத்திற்கு விவசாயத்திற்கு தேவையான நீர் மட்டம் உயரும். ககந்த ஆண்டு இதே போல் தன்னார்வ அமைப்பினர் முயற்சியால், அரூர் ஏரிக்கு தண்ணீர் நிரப்பியதால், இன்னமும் ஏரியில் தண்ணீர் இருந்து வருகிறது. இதனால் அரூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் கால்வாய் செல்லும் பகுதியில், கிராம மக்கள் ஒன்றிணைந்து மின் மோட்டர் வைத்து தண்ணீர் எடுத்து, கொளகம்பட்டி ஏரியையும் நிரம்பி கொண்டனர். தற்போது வாணியாறு உபரிநீரை கல்லாற்றின் ஒட்டின் தடுப்பணையில் இருந்து மீண்டும் அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தன்னார்வ அமைப்பினரை பொதுமக்களும், விவசாயிகளும் பாராட்டி வருகின்றனர்.