தருமபுரி நகரில் கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு சேவை பணிகளை செய்து வருகிறது ’மை தருமபுரி’ என்ற அமைப்பு. அதிக அளவு இளைஞர்களை தன்வசம் கொண்ட இந்த அமைப்பினர் ரத்ததானம், எளியோருக்கு உதவிகள் செய்தல், உணவு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவை பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது "பசிக்குதா வாங்க சாப்பிடுங்க" என்ற பசித்த எளியோருக்கு உணவளிக்கும் உன்னத சேவையை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளனர்.
தருமபுரி நகரில் மத்திய கூட்டுறவு வங்கி அருகில் இந்த சேவை பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமூக வலைத் தளங்கள் மூலம் இந்த தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்தி வரும் இந்த அமைப்பினர், மதியம் ஒரு மணி அளவில் அவ்வழியில் வரும் ஏழை, எளிய ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்கின்றனர். முதலில் 10 உணவுடன் தொடங்கினர். தற்போது 50 பேருக்கு வழங்கி வருகின்றனர். மேலும் உணவு முடிந்த பின் யாரேனும் வந்தால், அவர்களுக்கு மீண்டும் உணவை வாங்கி வந்து கொடுத்தனுப்புகின்றனர்.
கடந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற சேவையை மை தருமபுரி அமைப்பு சிறப்பாக மேற்கொண்டது. தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த சூழலில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து, சமூக இடைவெளி, முக கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து இந்த சேவை பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக விருப்பப்பட்டு பலரும் நன்கொடை வழங்க தொடங்கியுள்ளனர். தற்போது ஒரு மாத காலத்திற்கு தேவையான உணவு வழங்க கூடிய நிதியை தன்னார்வலர்கள் வழங்கியுள்ளனர். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சூழ்நிலையில் பலரும் பொருளாதாரத்தில் நலிவடைந்த உணவுக்கே வழி இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த உணவு வழங்கும் சேவை பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் தொடங்கினர். இந்த சேவை தற்போது 5 மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பாக உணவு வேண்டும் என்பவர்கள் அவர்களாகவே, வைத்திருக்கும் உணவை எடுத்துக் கொள்ளலாம். தற்போதைய நிலைக்கு உணவகங்களில் உணவு பார்சலாக பெற்று வழங்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் மை தருமபுரி அமைப்பினரே உணவு தயார் செய்து வழங்கவும் முடிவு செய்துள்ளனர். மேலும் இங்கு தினமும் ஒரு சிலர் உணவுக்காக வருவதால், ஒரே மாதிரியான உணவாக இல்லாமல், நாள்தோறும் தக்காளி, எலுமிச்சை, தயிர், கலவை சாதம் என வழங்கி வருகின்றனர். இந்த சேவையை தொடர்ந்து செயல்படுத்தவும் முடிவெடுத்துள்ளனர். இந்த தன்னார்வ அமைப்பினருக்கு உதவியாக, பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்கள் மற்றும் நினைவு தினங்களை அனுசரிக்கும் நல்லுள்ளங்களும், தினசரி உணவு செலவை வழங்கி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கி, இன்று வரை தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு ஒரு வேளை உணவளித்து மனித நேயத்தை காத்து நிற்கும் ’மை தருமபுரி’ அமைப்பினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.