காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 11,000 கன அடியிலிருந்து 9,000 கன அடியாக நீர்வரத்து குறைவு-கர்நாடக அணைகளிலிருந்து நீர்திறப்பு வினாடிக்கு 17,651 கன அடியாக அதிகரிப்பு.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை குறைந்ததால், கர்நாடக அணைகளிலிருந்து நீர்திறப்பு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் தமிழக எல்லயான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து குறைந்து, வினாடிக்கு 11,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,000 கன அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வந்தாலும், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால், ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் நல்ல மழை பெய்து இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி உயரத்தில், தற்போதைய 116.44 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14052 கன அடியாக உள்ளது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 9,730 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அதைப்போல கபிணி அணையின் மொத்த கொள்ளளவான 84.00 அடியில், தற்போது 83.58 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.
மேலும் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,906 கன அடியாக உள்ளது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 7921 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து அதிகரித்து, வினாடிக்கு 17,651 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடியாக உள்ளது. ஆனால் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு நேற்று வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து 16,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. தற்போது நீர் திறப்பு அதிகரிப்பால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கும், இதனால் நீர்மட்டம் உயர்வும் வாய்ப்புள்ளது. மேலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கொடுக்காமல், உபரிநீர் மட்டுமே திறந்து வருகிறது. எனவே கடந்த 4 மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை முழுவதையும் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.