சென்னை, மாமல்லபுரத்தில் வருகின்ற 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து, தருமபுரி மாவட்டத்திற்கு வரப்பெற்ற மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை (Chess Olympiad Symbolic Torch) தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி பெற்று, தருமபுரி மாவட்ட தடகள வீரர் பி.வீரமணியிடம் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தருமபுரி மாவட்ட விளையாட்டு பிரிவு விளையாட்டு வீரர் வீராங்கனைகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மாதிரி செஸ் ஒலிம்பியாட் தொடர் ஓட்டத்தில், கல்லூரி மாணவர்கள் ஜோதியை கையில் ஏந்தியவாறு சென்றனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, இலக்கியம்பட்டி, பாரதிபுரம், அரசு மருத்துவமனை, நெசவாளர் காலனி வழியாக தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்தது. தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன் இந்த ஜோதியினை பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவ, மாணவிகள் முன்னிலையில் ஒலிம்பிக் ஜோதியை மாவட்ட ஆட்சியர் கீ.சாந்தி மாணவர்களின் பார்வைக்காக வைத்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நம்ம சென்னை, நம்ம செஸ் ஒலிம்பிக் மற்றும் 188 நாடுகளின் பெயர்கள் கொண்ட பதாகைகள் கையில் ஏந்தி நின்றவர்களுக்கு, 188 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வண்ண வண்ண செஸ் ஒலிம்பிக் பலூன் மற்றும் புறாக்களை வானில் பறக்க விட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், சிலம்பம் சுற்றுதல், மல்லர் கம்பம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்தனர். இதனைத் தொடர்ந்து மாதிரி செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தமிழரின் பாரம்பரிய கலைகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் சித்ரா விஜயன், மாவட்ட திட்ட அலுவலர் பாபு, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர். கிள்ளிவளவன் மற்றும் அரசு மாணவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்