தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கெண்டையனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முருக்கம்பட்டி பங்காரு கூழிக்காடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஏரியில் தண்ணீர் தேங்கினால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் வசதி கிடைக்கும். இந்த பகுதியில் 1993 ஆம் ஆண்டில் ஏரியில் தடுப்பணை கட்டி உபரிநீரை கிராம மக்கள் விவசாயத்திற்கும் ஆடு, மாடு பருகுவதற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவரின்  மகன்கள் நல்லதம்பி, இளங்கோவன், குப்புசாமி, ஆகிய மூவரும், ஏரி தங்களது விவசாய நிலத்தில் இருப்பதாகக் கூறி ஏரியில் உள்ள  தடுப்பணையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் இல்லாமல் இந்த கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 

மாவட்ட ஆட்சியரிடம் மனு :

 



இதனையடுத்து ஏரியின் தடுப்பணையை சேதப்படுத்திய நல்லதம்பி, இளங்கோவன், குப்புசாமி ஆகியோரிடம் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஏரி தங்களது  விவசாய நிலத்தில் இருப்பதால்,  இந்த இடத்திற்கு யாரும் வரக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் காவல் நிலையம்,  வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரையில் இந்த மக்களின் கோரிக்கைக்கு, யாரும் செவி சாய்க்கவில்லை. இதனை அடுத்து 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏரியை மீட்டு தர வேண்டும்; ஏரி தடுப்பணையை சேதப்படுத்திய மூவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். 

 

கிராம மக்கள் கோரிக்கை:

 



 

இந்த ஏரியை காலங்காலமாக இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகிறோம். தற்பொழுது சகோதரர்கள் மூன்று பேரும் ஒன்றிணைந்து ஏரியின் தடுப்பணையை உடைத்து விட்டார்கள். இந்த ஏரியில் தண்ணீர் இல்லையென்றால், இங்குள்ளவர்கள் வேறு இடத்திற்கு  சென்று விடுவார்கள். இந்த ஏரியை ஆக்கிரமித்து கொள்ளலாம் என்ற நோக்கில் ஏரியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். தற்போது தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் செய்ய முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 

எனவே ஏரி தடுப்பணையை உடைத்து சேதப்படுத்திய இளங்கோவன், நல்லதம்பி, குப்புசாமி  ஆகிய மூவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஏரியை மீட்டுத் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 







தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கான பணிகளை ஊராட்சி மன்றத்திலேயே ஒப்பந்தம் விட வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

 



 

தருமபுரி மாவட்டம் முழுவதும் 251 கிராம ஊராட்சிகள் உள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, உள்ளாட்சி மன்றங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குவது இல்லை என அடிக்கடி ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது அனைத்து கிராமங்களுக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் ஒதுக்கப்படுகிறது.  இந்த பணிகள் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திட்ட அலுவலர் அலுவலகத்திலோ நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் தருமபுரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிணைந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  இதில் கிராம ஊராட்சிகளுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தங்கள் விடப்படுவதால், அந்தந்த ஊராட்சியில் உள்ள கிராமத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கிராம ஊராட்சிகளுக்கான பணிகளை அந்தந்த கிராம ஊராட்சிகளிலே ஒப்பந்தம் விட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலரிடத்தில் மனு அளித்தனர்.

 



 

இதை தொடர்ந்து நாளை காலை அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களையும் திட்ட அலுவலர் தலைமையில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும் இந்த பேச்சுவார்த்தையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக ஊராட்சி மன்ற தலைவர்கள்  தெரிவித்தனர். இதில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பைச் சார்ந்த கோவிந்தராஜ், சி.எம்.ஆர்.முருகன், கலைச்செல்வன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிணைந்து மனு அளித்தனர்.