தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பங்குநத்தம் கொட்டாய் பகுதியில் அரசு  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்டித் தர வேண்டும  என பெற்றோர்கள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

 

இதனை தொடர்ந்து அரசு பள்ளிக்கு சுற்று சுவர் அமைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுற்று சுவர் கட்டும் பணியை தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். 

 



 

இதனை தொடர்ந்து எம்எல்ஏ, மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளிக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.  மேலும் பள்ளியின் தேவைகளை தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக அவற்றை செய்து கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் ஆசிரியர்களிடம் தெரிவித்தார். அப்போது மதிய நேரம் என்பதால் பள்ளி மாணவர்கள் அனைவரும் உணவு அருந்த சென்றனர். இதனை கண்ட எம்.எல்.ஏ. மாணவர்களோடு சேர்ந்து நின்று உணவினை பெற்றுக் கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது மாணவிகளிடம் தினம் தோறும் பள்ளியில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

 

பின்னர் மாணவர்களுக்காக சுவையான உணவு தயார் செய்த சமையலருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.  மேலும் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் உணவிற்கான அரிசியை இன்னும் தரமானதாக வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார். மாணவர்களோடு சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் உணவருந்தியது, மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

 

 

தருமபுரியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மகளிர் விடுதியை மாவட்ட ஆட்சியர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

 



தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு புதிய பணிகள் மற்றும் அரசின் புதிய கட்டிடங்களையும் காணொலி வாயிலாக தமிழக முதல்வர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து துவக்கி வைத்தார். அதனையடுத்து தருமபுரி அடுத்த கடகத்தூரில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 3 கோடியே 20 இலட்சம் மதிப்பிலான புதிய மகளிர் விடுதி கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்ததையடுத்து இன்று முதல்வர் காணொளி காட்சியின் மூலம் திறந்து வைத்தார். அதனையடுத்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கட்டிட வளாகத்தில் குத்து விளக்கேற்றி வைத்தார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்ரமணி மற்றும் அரசு அதிகாரிகள் மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.