தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் 26 ஆம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 28 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். 



இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்றைய தினம் சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக பசும்பால் ஒரு லிட்டருக்கு 32 ரூபாயிலிருந்து 42 ரூபாய் ஆகவும், எருமை பால் ஒரு லிட்டருக்கு 41 ரூபாயில் இருந்து 51 ரூபாயாகவும் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும், பால் கூட்டுறவு சங்க பணியாளர்களை பணி வரன்முறை படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கோஷங்கள் எழுப்பப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ”பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும் பால் 32 ரூபாயிலிருந்து 42 ரூபாயாகவும் எருமை பால் ஒரு லிட்டருக்கு 41 ரூபாயிலிருந்து 51 ரூபாயாக கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 26 ஆம் தேதிக்குள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்காவிட்டால் இரண்டாம் கட்டமாக ஆவின் மற்றும் தனியாருக்கு பால் வழங்கும் அனைத்து பால் உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து 28 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும்” எனக் கூறினார்.


இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகும் என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆவினுக்கு பால் வழங்கும் கூட்டுறவாளர்களின் அனைத்து கரவை தினங்களுக்கும் மத்திய அரசு, மாநில அரசு நிதி உதவி மற்றும் உறுப்பினர்கள் கட்டணத்தில் நூறு சதவீதம் ஆவின் காப்பீட்டு திட்டத்தை உருவாக்கி அதற்கு மாண்புமிகு முதல்வர் பெயரில் வரையறை செய்து அறிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.