தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதில் பாலக்கோடு, பென்னாகரம் பகுதியில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது.  இதனால் சோம்பட்டி, பேட்ரஹள்ளி, நல்லாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி, இண்டூர் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இண்டூர் ஏரி கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது நிரம்பி உள்ளது. இந்நிலையில் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் நத்தஹள்ளி வழியாக நாகாவதி அணைக்கு செல்கிறது. இதனால் நத்தஹள்ளி அருகே சாலையில் குறுக்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நத்தள்ளி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், இந்த சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் இரண்டு பள்ளிகளுக்கும் செல்லும் குழந்தைகள் ஆபத்தான முறையில் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய சூழல் இருந்து வருகிறது.

 

மேலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகளை தண்ணீரை கடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தினமும் காலை மற்றும் பள்ளி முடியும் மாலை நேரங்களில் பெற்றோர்கள் குழந்தைகளை தண்ணீரில் கையை பிடித்து அழைத்துச் செல்வதும், நீண்ட வரிசையில் நின்று கொண்டு மாணவ, மாணவிகளை தண்ணீரை கடந்து செல்லவும் உதவுகின்றனர்.

 

இந்நிலையில் தண்ணீரை கடந்து செல்கின்ற பொழுது மாணவி ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் மாணவியை தூக்கிச் சென்றனர். ஒருவேளை இந்தப் பகுதியில் மாணவர்கள்  மட்டுமே சாலை கடந்திருந்தால் மிகப்பெரிய ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். மேலும் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை அழைத்து செல்ல வருவதால், வேலைக்கு போக முடிவதில்லை.

 




 

மேலும் அந்தப் பகுதியில் இருந்து வரும் கிராம மக்களும் இந்த தண்ணீரில் நடந்து செல்கின்றனர். மேலும் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இதனால் தண்ணீரில் மேடு, பள்ளம் தெரியாத நிலை இருப்பதால், வயதானவர்கள், முதியவர்கள் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுகின்ற சூழல் இருந்து வருகிறது. அவ்வாறு கீழே தடுமாறி விழும் பட்சத்தில் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் அபாயமும் இருந்து வருகிறது. எனவே இந்த தண்ணீரில் பள்ளி குழந்தைகளும் வயதான முதியவர்களும் கடந்து செல்வதற்கு தற்காலிகமான ஒரு தீர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் தண்ணீர் குறைந்தவவுடன் இந்த பகுதியில் ஒரு சிறிய தலைப்பாலம் அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வசதி செய்து தர வேண்டும் என கிராமமக்களும், பள்ளி குழந்தைகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 



 

இதனையறிந்த நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தண்ணீரை கடந்து செல்ல, ஆண்களை வரிசையாக நிறுத்தி மாணவர்கள் பாதுகாப்பாக செல்ல உதவி செய்தனர். மேலும் தண்ணீர் குறைந்தால், மட்டுமே இந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதுவரை மாணவர்களும், பொதுமக்களும் பாதுகாப்பாக தண்ணீரை கடக்க கயிறு கட்டி, வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என வட்டாட்சியர் ஆறுமுகம் தெரிவித்தார்.