காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. குறிப்பாக, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடிய கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 69,873 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.11 அடியாக உள்ளது. கடந்த 4 நாட்களில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் 25 அடி உயர்ந்துள்ளது.


டெல்டா பாசனம்:


மேட்டூர் அணையில் இருந்து சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்ததால் இதுவரை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. 



89 ஆண்டு நீர் திறப்பு:


மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு தொடங்கி உரிய தேதியான ஜூன் 12 அன்று 18 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்கு முன்னதாக 11 முறை திறக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக 60 ஆண்டுகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.76 அடியாக இருந்த நிலையில் சுதந்திரத்திற்கு பின்னர் முதன்முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


விவசாயிகள் கோரிக்கை: 


மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட தேதியான ஜூம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படாததால் தமிழ்நாட்டில் உள்ள 12 டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து போகும் நிலை ஏற்படும். இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் குருவை சம்பா பயிரிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர் வரத்து உயர்ந்து வருகிறது. எனவே டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் உடனடியாக திறக்கப்பட வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



நீர் நிலுவை:


உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா, ஆண்டு தோறும் ஜூன் முதல் மே வரை தமிழகத்துக்கு, 177.25 டி.எம்.சி., வழங்க வேண்டும். கடந்த, 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், 2.83 டி.எம்.சி., ஜூலை மாதத்தில், 8.74, ஆகஸ்டில், 19.90, செப்டம்பரில், 13.58, அக்டோபரில், 12.84. நவம்பரில், 10.65, டிசம்பரில், 4, பின்னர் 2024 ஜனவரியில், 1.4, பிப்ரவரியில், 0.6, மார்ச்சில், 0.94, ஏப்ரலில், 0.43 என இதுவரை, 75.91 டி.எம்.சி., நீர் மட்டுமே கர்நாடகா மாநிலம் வழங்கியுள்ளது. இன்னும், 101.34 டி.எம்.சி., நீர் நிலுவை வைத்துள்ளது. கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் இருப்பு குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாகக் கூறி, தண்ணீர் தர முடியாது என கர்நாடகா மாநில அரசு தொடர்ந்து கூறி வருகிறது.


கடந்த ஆண்டு நீர் திறப்பு:


கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக உரிய தேதியில் (ஜூன் 12) தண்ணீர் திறக்கப்பட்டதால் 16.5 லட்சம் ஏக்கர் வசனம் பெற்றது. கடந்த ஆண்டில் மட்டும் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டது. இதேபோன்று கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பையொட்டி தமிழக அரசு சார்பில் 4061 கி.மீ தூர்வாரப்பட்டது குறிப்பிடத்தக்கது.