சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 19,228 கன அடியாக அதிகரித்துள்ளது.

Continues below advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. இதன் காரணமாக மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கிருந்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் மேட்டூர் அணை இந்தாண்டில் முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. ஆனாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்தது.

Continues below advertisement

பின்னர் மழை மீண்டும் பெய்ய தொடங்கியதால் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதியும், 3-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 20ந் தேதியும், ஜூலை 25ந் தேதி 4வது முறையாகவும், ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி 5-வது முறையாகவும், கடந்த 2-ந் தேதி 6வது முறையாகவும் நிரம்பியது. இதற்கிடையே மீண்டும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் அணைக்கு வரும் நீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.86 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரத்து 228 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் இந்தாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் தற்போது 93.24 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு: அருவியில் குளிக்க தடை

கர்நாடகா, தமிழக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு நேற்று காலை 12 ஆயிரம் கனஅடி யாக வந்தது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இன்றுகாலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.

இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் அருவியில் குளிக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.பின்னர் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.