சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று கலை 8:00 மணிக்கு வினாடிக்கு 30,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

Continues below advertisement

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  1ம் தேதி முதல் இன்று வரையில் வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட 58 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அதாவது, 95 மில்லி மீட்டர் மழை பெய்யும் நிலையில், 150.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, சென்னையில் 23 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அதேவேளையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

7-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

இந்தாண்டு முதன் முறையாக ஜூன் 29ம் தேதி தனது முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை, 2ஆவது முறையாக ஜூலை 5ம் தேதி, 3 ஆவது முறையாக ஜூலை 20ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை தொட்டது. பின்னர் ஜூலை 25, ஆகஸ்ட் 20, செப்டம்பர் 2 என அடுத்தடுத்து ஆறு முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் தற்போது, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவரமடைந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதன்மூலம் இந்த ஆண்டில் 7ஆவது முறையாக நேற்று மாலை மேட்டூர் அணை 120 அடியான முழு கொள்ளளவை எட்டியுள்ளது. முன்னதாக 2006ஆம் ஆண்டு 6 முறை அணை நிரம்பி சாதனை படைத்திருந்தது. இதனை முறியடிக்கும் வகையில் நடப்பாண்டு 7 முறை நிரம்பி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

22300கன அடி நீர் வெளியேற்றம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று கலை 8:00 மணிக்கு வினாடிக்கு 30,500 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22300கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மத குகள் வழியாக வினாடிக்கு 500கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  

மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 7700கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் தற்போது நீர்மட்டம் 101.36 அடியை எட்டியுள்ளது. 102 நீர்மட்டத்தை எட்டினால், அணையில் இருந்து தற்போது அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை 5 ஆயிரம் கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்த்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், பவானிசாகர் அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சங்கராபரணி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள 32 அடி கொள்ளளவு கொண்ட வீடூர் அணை நீர்மட்டம் 29 அடியை எட்டியது.