சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

Continues below advertisement


மேட்டூர் அணை நிலவரம் 


தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 1ம் தேதி முதல் இன்று வரையில் வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட 58 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.


தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்த ஆண்டு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது. அதே நேரத்தில் அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்த நிலையில், அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 21ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்தானது மேலும் அதிகரித்துள்ளது.


அதாவது கடந்த 2 நாட்களாக அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நீர் வரத்தானது, நேற்று மாலை 6 மணிக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை அணைக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது.


வெள்ள அபாய எச்சரிக்கை


இதையடுத்து சேலம், நாமக்கல் உள்பட காவிரி ஆறு பாய்ந்தோடும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் காவிரி கரையை பகுதியை ஒட்டி அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.