சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
மேட்டூர் அணை நிலவரம்
தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 1ம் தேதி முதல் இன்று வரையில் வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட 58 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை 7 முறை நிரம்பியது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து இருந்தது. அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதையடுத்து அணையில் இருந்து நீர்மின்நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 300 கனஅடியும், 16 கண்மதகு வழியாக வினாடிக்கு 12 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதன் காரணமாக, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தமிழகம் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 2 அணைகளும் முழுமையாக நிரம்பி உள்ள நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரத்து 900 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று இரவு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்டு இருந்த தடையானது தொடர்ந்து 3வது நாளாக நீடிக்கிறது. மேலும் பரிசல் இயக்க தடை 2வது நாளாக நீடிக்கிறது.காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.