தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ராமன் நகர் பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைத்து தரக்கோரி சேரும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் உங்கரானஅள்ளி மற்றும் இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ராமன் நகர் பல ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது. இந்த பகுதியில் 500க்கும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் ஆண்டுதோறும் சாலை சேரும் சகதியுமாக மாறிப் போவது வாடிக்கையாக உள்ளது. புதிய தார் சாலை அமைத்து தரக் கோரி ஊராட்சி மன்றம் சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதுவரை சாலை செப்பனிடப்படவில்லை. இந்நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் சாலையில் நடந்து செல்ல முடியாமல் சேரும் சகதியமாக மாறி மழைநீர் தேங்கி குழம்போல் காட்சியளித்தது. சாலை குண்டும் குழியுமாக மாறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதிய சாலை அமைத்து தரக் கோரியும் தற்காலிகமாக சாலையை செப்பனிட வலியுறுத்தியும் சேரும் சகதியுமாக மாறிய மண் சாலையில் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த பகுதி மக்கள் கூறும் பொழுது, "இப்பகுதியில் முறையான சாலை வசதி, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தருமபுரியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் சாதாரண மழைக்கே இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக சேரும் சகதியமாக மாறி உள்ளது. இந்த வழியில் நடந்து கூட செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று கூட சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் கீழே விழுந்து கை கால்கள் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பள்ளியில் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் இந்த வழியில் அதிக வாகன போக்குவரத்து இருப்பதால் சாலை ஓரத்தில் கூட செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.