அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபின் சேலம் மாவட்டத்திற்கு முதல்முறையாக நேற்று முன்தினம் வருகை தந்த நிலையில், சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல் முதல் சேலம் மாநகரம் பகுதி வரை பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரம் கணக்கானோர் நேரில் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மலர் கொத்துகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு செல்கின்றனர். 



இந்த நிலையில் நேற்று ஒரே நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சேலம் நெடுஞ்சாலை நகரில் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக நெடுஞ்சாலை நகர் உள்ள ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை முழுவதும் கட்சித் தொண்டர்கள் வெள்ளத்தால் காட்சியளிக்கிறது. இதனால் திருவா கவுண்டர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக வருகை தந்து அதிமுக பொதுச்செயலாளர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த ஊர்வலத்தில் கிராமிய கலைஞர்களின் நடனம் இடம்பெற்றது. இந்த சீர்வரிசை ஊர்வலத்தில் சாமி புகைப்படங்கள், மலர் கொத்துகள், இனிப்பு வகைகள், பழம், கோழிகள், எடப்பாடி பழனிசாமியின் உருவப் புகைப்படம் கொண்ட போட்டோக்கள் என ஏராளமானதை எடுத்து வந்து எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.



இதைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு, மக்கள் எழுச்சியை பார்க்கும்போது நாடாளுமன்றத் தேர்தல், பொதுத் தேர்தல் எது வந்தாலும் தருமபுரி மாவட்டத்தின் அதிமுக தான் வெற்றிபெறும் என்றார். மக்கள் முழுமையாக அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் தலைமையாக ஏற்றுகொள்ளனர். ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தான் என்பதை நிரூபிக்கும் விதமாக சேலத்தை நோக்கி படையெடுத்து வருகிறது. மேலும் எதிர்காலத்திலும், எப்பொழுதும் ஓபிஎஸ்ஐ ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அதிமுக தொண்டர்கள் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் ஆர்வத்தில் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டும் ஒருசிலர் சுவர் ஏறி குதித்தும் வீட்டுக்குள் உள்ளே நுழைந்தால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி வரிசைப்படி அனுப்பி வைத்தனர். சேலம் நெடுஞ்சாலைநகர் பகுதியானது கோவில் திருவிழா நடைபெறும் இடம்போன்று காட்சியளித்து வருகிறது.