காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் விநாடிக்கு 40,000 கன அடியிலிருந்து 30,000 கன அடியாக குறைவு-கர்நாடக அணைகள் நிரம்புள்ளதால், எந்நேரமும் தண்ணீர் திறக்க வாய்ப்பு.

 

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு நீர்வரத்து  வினாடிக்கு 3,500 கனஅடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 83.40 அடியாக உள்ளது. மேலும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,984 கன அடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 124.04 அடியாக உள்ளது. இந்நிலையில் கபினியிலிருந்து 2,500 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் வினாடிக்கு 3,000 கன அடி என இரண்டு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5,500 கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டு வருகிறது.

 



 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளா, கர்நாடக, தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 40,000 கன அடியாக உயர்ந்தது. தற்போது மழை சற்று குறைந்து உள்ளதால், நீர்வரத்து சரிந்து, இன்று காலை நிலவரப்படி பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைந்து உள்ளது. தொடர்ந்து ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

 



 

மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பிரதான  அருவிக்கு செல்லும் நடைப்பாதைக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளப் பெருக்கால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.  காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால்,  ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதால், மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

 



 

தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 27,251 கன அடியிலிருந்து 37,161 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.79 அடியிலிருந்து 105.14 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை பொழிந்து வருவதால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வருகிறது. மேலும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 10,000 முதல் 20,000 கன அடி வரை தண்ணீர் வருவதால், காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக, காவிரி கரையோர மக்களுக்கு கர்நாடக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.