தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஊத்துக்குழி மலை மாதேஸ்வரன் திருக்கோயிலில் சத்யபாமா அறக்கட்டளை சார்பில் கோயில் கருவறைக்கான தமிழ் ஆகம பூசாரி பயிற்சி கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்டு வந்தது. தொடர்ந்து மூன்று நாள் பயிற்சியில் ஆண்கள், பெண்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தொடர்ந்து பயிற்சியின் இறுதி நாளான இன்று  பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சின் பொதுச்செயலாளுருமான கௌதமன் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.

 


 

 இதனையடுத்து  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 

 

ஆகம பயிற்சி முடித்தவர்களுக்கு கோயிலில் பூஜை செய்கிற உரிமையை தமிழக அரசு வழங்கி உள்ளதை வரவேற்கிறோம்.  இவர்களுக்கு 60 வயது வரை மட்டும் கோயில்களில் பணி செய்ய  வயது வரம்பை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளதை போன்று ஏற்கனவே பல ஆண்டுகளாக கோயில்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கும் வயது வரம்பை கொண்டுவர வேண்டும் என்றும், அனைத்து  சாதியினரும் அர்சகர்கள் ஆகலாம் என்கிற  அடிப்படையில் தான் இந்த பணி வழங்கப்படுகிறது. 

 


 

அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆக வேண்டும் என்றால்  அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு  இடஒதுக்கீடு அடிப்படையில் பணி  ஆணை வழங்க வேண்டும். ஏற்கெனவே பயிற்சி முடித்தவர்களையும்  உள்ளடக்க வேண்டும். மேலும்  பயிற்சி கொடுத்தவர்களையும், இதில் சேர்க்க வேண்டும். அதே போல் அதற்கென தனிக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும் அல்லது  தற்போது உள்ள கல்லூரிகளில் வகுப்புகளை துவங்க வேண்டும்.  

 

கோமாளி ஒருவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற பணி ஆணை வழங்கினால், சட்ட ரீதியாக தடுப்பேன் என்கிறார்கள். இந்த பிரச்சனையில், தமிழக அரசுக்கு  துணையாக ஜல்லிக்கட்டுக்கு இளைஞர்கள்  எப்படி போராட்டம் செய்தார்களோ, அதே போல் நாங்களும் தமிழக அரசுக்கு துணையாக நிற்போம். அந்த கோமாளிகளுக்கு நாங்கள் பாடம் புகட்டுவோம்.  தமிழன் கட்டிய சிதம்பர நடராஜர் கோயில் தீட்சியர்களுக்கு சொந்தமாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்ட ரீதியாக  அவர்களிடமிருந்து  மீட்டு தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த கோயில் இந்து அறநிலைத் துறையினரின் கீழ் வர வேண்டும். 

 


 

கடந்த ஆட்சி  போல் இல்லாமல் இந்த ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை காப்பாற்று விதமாக அவர் செயல்பட வேண்டும். தமிழக  அரசு 100 நாள் கடந்த நிலையில், இதனை பாரதிய ஜனதா கட்சியினர் கொச்சை படுத்துகின்றனர்.  பாஜக கடந்த 7  ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு என்ன  செய்தார்கள்  என பதில் கூறி விட்டு,  மற்றவர்களை பற்றி பேச வேண்டும்.  தமிழக அரசு 150 நாட்கள்  தொடுவதற்குள், நீட் தேர்வு மற்றும் 7 பேர் விடுதலை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற  வேண்டும் என  தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.  தமிழக அரசுக்கு எந்த அச்சுறுத்தல் வந்தாலும் தமிழர்கள் ஆதரவாக இருந்து தோள் கொடுப்போம் என இயக்குநர்  கௌதமன் தெரிவித்தார்.