சேலத்தில் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. 



வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு மண் சரிவை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். குப்பனூர் வழியாக செல்லும் வாகனங்கள் சேலம் - ஏற்காடு பிரதான சாலை வழியாக ஏற்காடு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குப்பனூர் அடிவார பகுதியில் உள்ள விளை நிலங்களிலும் அதிக அளவில் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நேற்று இரவு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்து ராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.



சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் கிடுகிடுவென நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் டி. பெருமாபாளையம் பகுதியில் உள்ள காரைக்காடு ஏரி நிரம்பி அதன் கரை உடைந்ததில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது. இதில் 2 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. மேலும் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்து, அரிசி, பருப்பு, உடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததை கண்டு அங்கிருந்து தப்பி ஓடிய கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதியை எவ்வித அரசு அதிகாரிகளும் பார்வையிட்டு மீட்பு பணியை மேற்கொள்ளவில்லை அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மாநகராட்சி பகுதியில் 66 மி.மீ மழை பதிவாகி உள்ளது. ஐந்து ரோடு, நான்கு ரோடு, கிச்சிப்பாளையம், கன்னங்குறிச்சி, நாராயண நகர், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். சேலம் மாவட்டத்தில் மொத்தமாக 248.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சேலம் நகர்புற பகுதிகளில் 66 மி.மீ, ஆத்தூர் 63.2 மி.மீ, பனமரத்துப்பட்டி 24 மி.மீ, எடப்பாடியில் 18.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது.