தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள மலை அடிவாரத்திலிருந்து பீனியாறு உருவாகிறது. இந்த பீனியாறு வழியாக மழைக் காலங்களில் வரும் தண்ணீர் சாலூர், அதிகாரப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, புதுப்பட்டி வழியாக வாணியாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் தண்ணீர் வருவதன் மூலம் சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பீனியாறு ஒட்டி தனியார் சேகோ பேக்டரி அமைந்துள்ளது.
இந்த சேகோ பேக்டரியில் இரண்டு ராட்சத குளங்கள் வெட்டப்பட்டு, பீனியாற்றில் தண்ணீர் வரும் பொழுது அதனை தடுத்து குளத்தை நிரப்பி வருகின்றனர். இதனால் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை என சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமியிடம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, பீனியாறு பகுதியை ஆய்வு செய்தார். தொடர்ந்து பீனியாற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதாக கூறப்படும் தனியார் சேகோ பேக்டரி உள்ள சென்று குளத்தினை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார். தொடர்ந்து குளத்தில் இருக்கும் தண்ணீரை பார்த்தவுடன், தனியார் சேகோ நிர்வாகத்தினரை அழைத்து பேசினார்.
அப்பொழுது ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டாம். நீங்கள் தண்ணீர் எடுப்பதால் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நீங்கள் மரவள்ளி கிழங்கை விவசாயிகளிடம் தான் வாங்குகிறீர்கள், நீங்களும் விவசாயி தான். நீங்கள் தண்ணீர் எடுப்பது பிரச்சினையில்லை. ஆனால் விவசாயிகள் பாதிக்கின்ற அளவுக்கு இருக்க கூடாது. மேலும் ஆற்றில் செல்லும் தண்ணீர் விவசாய பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைத்தவுடன், வேண்டுமானால் உங்களுக்கு தேவைக்கான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் விவசாயிகளுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து உங்கள் குளங்களுக்கு எடுக்ககூடாது என்று தெரிவித்தார்.
நீங்கள் தண்ணீர் எடுப்பதால், போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என நீண்ட நாட்களாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆகவே இனிமேல் ஆற்றிலிருந்து, குளத்திற்கு நீங்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது. நான் எதிர் கட்சி சட்ட மன்ற உறுப்பினர், விவசாயிகளின் நலனுக்கு சாலையில் இறங்கி போராட வேண்டிய நிலை இருக்கும் என தனியார் சேகோ பேக்டரி நிர்வாகத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தாமி எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின் போது, வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.