கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. ஆனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளா, கர்நாடக, தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று காலை நிலவரப்படி பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 15,000 கன அடியாக உயர்ந்தது. தற்போது மழை குறைந்ததால், படிப்படியாக நீர்வரத்து குறைந்து, இன்று நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 14,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்தாலும் ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர்ந்து தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை என்பதால், ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணராஜ சாகர அணை 124.80 அடி உயரத்தில் தற்போது முழுவதும் நிரம்பியுள்ளது. மேலும் வினாடிக்கு 6,240 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 3,800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கபினி அணை 84 அடி உயரத்தில் முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது. தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 3,518 கன அடியாக உள்ளது. இதனால் கபினியிலிருந்து வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேல கடந்த சில தினங்களாக கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 4,700 கன அடி திறக்கப்பட்டு வந்தது. தற்போது இரண்டு அணிகளும் முழு கொள்ளளவை எட்டியதால், காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்து வினாடிக்கு 6100 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்தாண்டும் மேட்டூர் அணை 120 அடியை எட்ட வாய்ப்புள்ளது.