கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்வார்கள். பக்தர்கள் வருகைக்காக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. சேலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை தீபத் திருவிழாவை காண திருவண்ணாமலை சொல்வது வழக்கம். இதற்காக இந்த ஆண்டு சேலம் கோட்டத்தில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 


கார்த்திகை தீபத் திருவிழா: சேலத்தில்  இருந்து திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பேருந்துகள்


சேலம் மண்டலத்திற்குட்பட்ட சேலம், ஆத்தூர், நாமக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 270 சிறப்பு பேருந்துகளும், தருமபுரி மண்டலத்திற்குட்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஓசூர், பர்கூர், பெங்களூரில் இருந்து 230 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 500 சிறப்பு பேருந்துகள் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க சேலம், புதியபேருந்து நிலையம், ஆத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



இதனிடையே தீப விழாவிற்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதையொட்டி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சேலம், கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 9 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் திருவண்ணாமலையில் சிறப்பு பேருந்துகள் ஒழுங்குப்படுத்துதல், கண்காணித்தல், போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். இந்த குழு டிசம்பர் 5 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 8 ஆம் தேதிகளில் பணியாற்றுவார்கள். மேலும் சேலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.