தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் இன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை காஞ்சிபுரத்தில் இன்று காலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி மற்றும் சேலம் மாநகர் செரி ரோட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு 2,500 மகளிர்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, ”கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முழுமையாக இத்திட்டம் சென்றடையும். மகளிரை நோக்கியே அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் நகர்த்தி வருகிறார். பெண்களின் முன்னேற்றத்திற்காக கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்களை முதலமைச்சர் செயல் படுத்தி வருகின்றார். சேலம் மாவட்டத்தில் 11 இலட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் 6 இலட்சம் மகளிர் விண்ணப்பித்துள்ளனர், மீதமுள்ளவர்களில் தகுதியான மகளிர் இருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை வழங்கப்படும். மேலும், தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விடுபட்டிருந்தால் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து தீர்வு காணலாம் என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறிப்பாக, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் எடப்பாடி பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் கோரிக்கை வைத்துள்ளார்கள். அவரது கோரிக்கையின்படி, நிச்சயமாக வணிக வளாகம் கட்டித்தரப்படும். ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் ஆகிய நகராட்சிகளில் கடந்த ஆட்சி காலத்தைவிட பொதுமக்களின் தேவைகள் கருதி அதிகளவிலான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் சேலம் மாவட்டத்திற்கு தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, கொலுசு உற்பத்தியாளர்களுக்கான பன்மாடி உற்பத்தி மையம், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள். இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம், பனமரத்துப்பட்டி ஏரி, மூக்கனேரி நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகள், பல்வேறு சாலைகள், பாலங்கள், குடிநீர் பணிகள் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்கள்” என்று கூறினார்.