தருமபுரி: அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் இன்னும் மூன்று மாதத்தில் நன்னீர்ரூற்று விழா நடைபெறும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரி மலை மீது அமைந்துள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மனைவியுடன் மலைப்பகுதியில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார். நடைபெறும் கோவில் திருப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நிருபர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், மலை மீது அமைந்துள்ள தீர்த்தகிரீஸ்வரர் மலைப்பாதையை சீரமைக்க அறநிலைத்துறையும் இணைந்து ஆலோசனை நடைபெற்ற பின்னர் மலைப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.
மலை மீது அமைந்துள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள 13 சன்னிதானங்கள் சீரமைக்கும் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டரை கோடி மதிப்பீட்டில் கோவில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று மாதத்தில் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று நன்னீரூற்று விழா நடைபெறும். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் தீர்த்தமலை கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் திருப்பணிக்காக அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மலையின் மீது உள்ள கோவிலுக்கு ஆங்கிலேயர் காலத்தில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. பின்னர் அந்த நிலம் பறிக்கப்பட்டது. அந்த நிலத்தை மீண்டும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இந்த தீர்த்த மலையை சுற்றிவர கிரிவல பாதை இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்தப் பாதையை கண்டறிந்து சாலை அமைத்ததற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்ட பிறகு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலா தளம் ஆக்கி கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் கோரிக்கை வைத்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.