தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தமிழகத்தில் உள்ள அனைத்து சிறை பணியாளர் குடியிருப்பு பகுதியில் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பயன்படுத்தும் வகையில் உடற்பயிற்சி நிலையம் திறக்க அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, சேலம் மத்திய சிறை மற்றும் சேலம் பெண்கள் சிறை ஆகியவற்றை 330 க்கும் மேற்பட்ட சிறைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் மத்திய சிறை அருகாமையில் சிறை காவலர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சிறை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்படுத்தும் வகையில் சிறப்பு உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சேலம் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகம் சுந்தரம் உடற்பயிற்சி நிலையத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.


தொடர்ந்து உடற்பயிற்சி நிலையத்தில் பயன்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சியாளர்களிடம் கேட்டறிந்தார். குறிப்பாக உடற்பயிற்சி நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள், சிறை காவலர்கள், சிறைத்துறை காவலர்களின் குழந்தைகள், சிறைத்துறையில் பணியாற்றும் பெண்கள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் தனித்தனியே நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. 



இதில், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்த உறுப்பினர்கள் இலவசமாக உடற்பயிற்சி நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் பயன்பெறும் வகையில் கடந்த ஒன்றாம் தேதி நூலகம் இருப்பதால் சிறைத் துறை காவலர்கள் மன அழுத்தம் குறைப்பதற்கும் பயன்பெறும் வகையில் இந்த சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் அரசின் அனைத்து பணியாளர்கள் தேர்வு, போட்டித் தேர்வு, டி என் பி எஸ் சி தேர்வுகள் உட்பட பல அரசு தேர்வுகளுக்கான முக்கிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இதேபோன்று சேலம் மத்திய சிறையில் பணியாற்றும் காவலர்களின் குழந்தைகள் சிறை துறை தேர்வு எழுதுவதற்கும், மத்திய சிறையில் பணியாற்றும் காவலர்கள் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் போன்று பதவி உயர்வு பெறுவதற்கு இந்த நூலகம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



ஆயிரம் புத்தகங்களை கொண்டு சிறிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த நூலகமானது, வரும் காலத்தில் பரப்பளவை பெரிதுபடுத்தி மிகப்பெரிய நூலகமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, பல அறிவு சார்ந்த புத்தகங்கள், போட்டித் தேர்வு புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், வீட்டில் உள்ள பெண்களுக்கான புத்தகங்கள் என ஒரு லட்சம் புத்தகங்கள் வரை வைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நூலகம் மற்றும் உடற்பயிற்சி நிலையத்தை சிறைத்துறை பணியாளர்கள் குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறினர். இந்த உடற்பயிற்சி நிலையம் திறப்பின்போது மத்திய சிறையின் ஜெயிலர், சேலம் பெண்கள் சிறை ஜெயிலர், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற சிறை துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.