தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 15 ஆம் தேதி துவக்கப்பட்டது. திட்டம் துவக்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்த தகுதியான மகளிர் வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் நிராகரிக்கப்பட்ட தகுதியானவர்கள் மகளிர் நேற்று முதல் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சேலம் மாநகர் அஸ்தம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் ஏராளமான திரண்டனர். இதனிடையே அலுவலகத்தில் உள்ள கணினி செயல்பாடாததால் அதிகாரிகள் செல்போன் மூலமாக மேல்முறையீடு பணிகளை மேற்கொண்டனர். 



இதனிடையே பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் அதிகாரியிடம் மகளிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முதலே மேல்முறையீடு செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை நாள் என்பதால் அலுவலகங்கள் இயங்கப்படவில்லை. இன்றைய தினமும் கணினி இயங்காததால் மகளிர் இடம் ஆவணங்களை பெற்றுக்கொண்டு பிறகு தொடர்பு கொள்வதாக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். குறிப்பாக அனைவரும் கூலித் தொழிலுக்கு செல்லும் நிலையில் இன்று ஒரு நாள் வருமானம் பாதித்துவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மேல்முறையீடு செய்ய போதிய வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். வசதி படைத்தவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை பணம் கிடைத்துள்ளது ஏழ்மையாக வசிக்கும் எங்களை போன்றவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.



இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை அறிய அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று ஆய்வு மேற்கொண்டோர். பின்னர் பொதுமக்களிடம், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் சந்தேகங்களைப் போக்கும் வகையில் உதவி மையங்கள் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் அவர்களது கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது. குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளம் வாயிலாக மேல்முறையீடு செய்யலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரம் அறிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், தகுதியானவர் எனக் கருதும்பட்சத்தில் இ.சேவை மையம் மூலமாகவோ அல்லது தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர் மூலமாகவோ மேல்முறையீடு செய்யலாம். அதன்படி, மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உரிய தகவல்களை வழங்கிட அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மையங்கள் மூலம் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.