பென்னாகரம் அருகேயுள்ள மலை கிராமங்களில் சீதாப்பழம் தண்ணீரின்றி காய்ந்து கருகியது. கடந்த ஆண்டு டன் கணக்கில் அறுவடை செய்து, ரூ.1 கோடி வரை விற்பனையான நிலையில், மழையில்லாததால், விளைச்சல் பாதித்து, வருவாய் கிடைக்கவில்லை என மலை கிராம விவசாயிகள் கவலை தெரிவித்தனர். 

 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள பிக்கிலி, மலையூர், வாரக்கொல்லை உள்ளிட்ட மலை கிராமங்களில் சுமார் 15 ஏக்கர் பரப்பில் சீதாப்பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு நிலவும் சீதோசன நிலையால் சீதாப்பழம் அதிக அளவில் மகசூல் தருகிறது. மலை கிராமத்தில் விளையும் சீதாப்பழங்களை வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்து சென்னை, கோவை, கேரளா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். 



 

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சீத்தாப்பழம் சீசன் நிலவுகிறது. இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்ததால், கடந்த ஆண்டை விட  கூடுதல் மகசூல் கிடைத்துள்ளது. தற்போது சீதாப்பழம் அறுவடை தொடங்கியுள்ளது. விவசாயிகள் சீதா பழங்களை அறுவடை செய்து கூடைகளில் எடுத்து வந்து வெளியூரிலிருந்து மலையூர் கிராமத்திற்கு வருகைதரும் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். நல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய அளவிலான பழங்கள் சராசரி கிலோ ரூ.20க்கும், கூடை 250 முதல் 200 ரூபாய் வரை என குறைந்த விலையில் வியாபாரிகள் வங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் சீதாப்பழ விளைச்சல் அதிகமாக இருந்தது. இதனால் தினந்தோறும் கண் கணக்கில் மலை கிராம மக்கள் விற்பனை செய்தனர். கடந்த ஆண்டு சீதாப்பழம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்தனர். மேலும் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் சீதாப்பழம் விளைச்சல் அமோகமாக இருந்தது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது.



 

இந்த நிலையில் இந்த ஆண்டு பருவ மழை ஏமாற்றியதால், சீதாப்பழம் சீசன் தொடங்குகின்ற நேரத்தில் செடிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் செடிகளில் வைக்கின்ற காய்கள் முழுவதும் தண்ணீர் இன்றி காய்ந்து கருகி, கீழே கொட்டியது‌. மேலும் மழை தாமதமாக பெய்து வருவதால், தற்பொழுது ஒரு சில செடிகளில் மட்டும் காய்கள் பிடித்து வருகிறது. ஆனாலும் வெள்ளை பூச்சிகள் தாக்குதல் இருப்பதால், அந்த பழங்களையும் வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு தினமும் 20 முதல் 30 கூடை வரை அறுவடை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு விவசாயிகள் ஒரு கூடை அறுவடை செய்வது என்பது சவாலாக இருந்து வருகிறது. இதனால் தினந்தோறும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்ட வந்த சீதா பழங்கள், தற்பொழுது நாள் ஒன்றுக்கு பத்து முதல் 20 கூடைகள் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் வியாபாரிகள் யாரும் மலை மீது வராததால், விவசாயிகளே ஒன்றிணைந்து பிக்கப் வாகனங்கள் மூலம் பாப்பாரப்பட்டி பகுதிக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். மேலும், போக்குவரத்து வசதி இல்லாததால், ஒரு கூடை 300 ரூபாய் வரை விற்பனை ஆகின்ற நிலையில், வண்டி வாடகை கூடைக்கு 100 ரூபாய் கொடுக்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு சீதாப்பழம் விற்பனையில் போதிய வருவாய் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.