தருமபுரியில் நடைபெற்ற 5-ம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா நிறைவு பெற்றது. 11 நாட்களில் 1.10 இலட்சம் புத்தகங்கள் ரூ.1.05 கோடிக்கு விற்பனையானது. கடந்த ஆண்டை விட ரூ.30 இலட்சம் அதிகமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தக ஆலயம் சார்பில் தருமபுரி வள்ளலார் திடலில், ஐந்தாம் ஆண்டு மாபெரும் புத்தக திருவிழா நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கப்பட்டு, 18-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ் இலக்கியம், வரலாறு, அறிவியில் உள்ளிட்ட கவிதைகள், சிறுகதைகள், நாவல், குழந்தைகளுக்கான புத்தகங்கள், பாடம் தொடர்பான புத்தகங்கள், நீதிநெறி கதைகள் என பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
மேலும் புத்தகத் திருவிழாவிற்கு வருபவர்களின் வசதிக்காக சிறுதானியங்களுக்கு பிரத்யேகமாக தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவு பொருட்கள் விற்பனை அங்காடி செயல்பட்டு வந்தது. இதில் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் நேரடியாக சிறுதானிய உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தி விற்பனை செய்து வந்தனர்.
தருமபுரியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், நாள்தோறும் நூல் அறிமுகம், வெளியீடு, கருத்தரங்கம், கவியரங்கம் மற்றும் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தது. இதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்று உரையாற்றி வந்தனர். இந்த புத்தகத் திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி சென்றனர். அதேபோல் ஆயிரக்கணக்கான வாசகர்களும், பொதுமக்களும் வருகை தந்து தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் ஐந்தாம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா நேற்று 18-ம் தேதியுடன் 11 நாட்களில் நிறைவடைந்தது. இதில் 1.10 இலட்சம் புத்தகங்கள், 1.05 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானது. இதில் பெரும்பாலும் தன்னம்பிக்கை, சிறுவர் கதைகள், திருக்குறள், அரசியல் தலைவர்கள் வரலாறு உள்ளிட்ட நூல்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆனது. கடந்தாண்டு 10 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 70 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 11 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக திருவிழாவில் கூடுதலாக 30 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையானது. இதனால் கடந்த ஆண்டை விட தருமபுரியில் புத்தக வாசிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.