காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியிலிருந்து 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனேக்கலில் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை, அருவிகள், பாறைகளை மூழ்கடித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிக்கிறது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கோடை மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 5000 கன அடியாக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 5000 கன அடியிலிருந்து 7500 கன அடியாக உயர்ந்தது. இதனை தொடர்ந்து தமிழக, கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு கோடை மழை தீவிரம் அடைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.


தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் அருவி, மற்றும் ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் மழை குறைந்ததால் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியிலிருந்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது. தொடர்ந்து இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரிப்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது.


இதனால் ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைமேடை, பிரதான அருவிகள் மற்றும் பாறைகளை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வரலாற்றில் கோடை காலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுவது இதுவே முதல் முறை. இதனால் காவிரி ஆற்றில் ஊட்டமலை, ஆலம்பாடி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் மழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து நீர்வரத்தை கண்காணித்து அளவீடு செய்து வருகின்றனர். கோடை விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சென்று வரும் நிலையில் தற்போது சுற்றுலாப் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு மூன்றாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண