கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளளவான 124.80 அடியாககவும்  தற்போதைய நீர் மட்டம் 123.40 அடியாகவும் உள்ளது. தொடர்ந்து அணைக்கான நீர்வரத்து 19,341 கன அடியாக உள்ளது. இதேப்போல் கபினி அணையின் மொத்த கொள்ளளவான 84.00 அடியாக உள்ள நிலையில் தற்போதைய நீர் மட்டம் 83.33 அடிவரை உயர்ந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,378 கன அடியாக உள்ளது. 

 

இந்நிலையில் கபினியில் இருந்து வினாடிக்கு 5,542 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 3,426 கன அடி என 8,968 கன அடி தண்ணீர் இன்று காலை நிலவரப்படி தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளா, கர்நாடக, தமிழகத்தில் கன மழை பெய்து வந்ததால், நீர்வரத்து வினாடிக்கு 35,000 கன அடி வரை உயர்ந்து. ஆனால் மழை குறைந்ததால், நீர்வரத்து 26,000 மற்றும் 20,000 கன அடிகளாக படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தொடர்ந்து மழை அதிகரித்ததால், மீண்டும் நீர்வரத்த படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 32,000 கன அடியாக உயர்ந்துள்ளது.  மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகித்து 12 மணி நிலவரப்படி 40, 000 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.



 

மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பிரதான  அருவிக்கு செல்லும் நடைப்பாதைக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளப் பெருக்கால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை குறைந்ததால், நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் 102 அடியாக உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம், வேகமாக உயரும். தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவல் துறை, தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதால், மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிருஷ்ணராஜசார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவை நோக்கி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் 10,000 முதல் 20,000 கன அடி உபரி நீர் எப்போது வேண்டுமானாலும் திறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே காவிரி ஆற்றங்கரையோரங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.